கொரோனா மேலாண்மை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை; பாகிஸ்தான் உள்பட 9 நாடுகள் பங்கேற்பு


கொரோனா மேலாண்மை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை; பாகிஸ்தான் உள்பட 9 நாடுகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Feb 2021 9:17 AM GMT (Updated: 18 Feb 2021 9:17 AM GMT)

பிரதமர் மோடி தலைமையிலான கொரோனா மேலாண்மைக்கான கூட்டத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 அண்டை நாடுகள் பங்கேற்க உள்ளன.

புதுடெல்லி,

மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, சர்வதேச சமூகத்திற்கு இதுநாள் வரையில் மொத்தம் 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.  அவற்றில், 64.7 லட்சம் தடுப்பு மருந்துகள் மானிய அடிப்படையிலும், 1.65 கோடி தடுப்பு மருந்துகள் வர்த்தக அடிப்படையிலும் வழங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கும் வருங்காலங்களில் இந்தியாவின் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா மேலாண்மை: அனுபவம், நல்ல பழக்கங்கள் மற்றும் முன்னெடுப்பு நடவடிக்கை என்ற தலைப்பிலான கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.  இதில், பாகிஸ்தான் உள்பட 9 அண்டை நாடுகள் பங்கேற்கின்றன.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், நேபாளம், பாகிஸ்தான், செசல்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு நாட்டில் இருந்தும், சுகாதார செயலாளர் மற்றும் கொரோனா மேலாண்மைக்கான தொழில் நுட்ப குழு தலைவர் என ஒன் பிளஸ் ஒன் முறையில் இருவர் பங்கேற்க அழைப்பு விடப்பட்டு உள்ளது.

Next Story