புதுச்சேரி : இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை


புதுச்சேரி : இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை
x
தினத்தந்தி 18 Feb 2021 4:41 PM GMT (Updated: 18 Feb 2021 4:41 PM GMT)

புதுச்சேரி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவை தொடர்ந்து இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

புதுச்சேரி: 

புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. 

சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் நாராயண சாமி தெரிவித்தார்.

 இதனை தொடர்ந்து, நேற்று, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக  எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் புதுச்சேரி கவர்னரின் செயலர் சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனுவை வழங்கினர். இதில் 14 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இதற்கிடையே, இன்று புதுச்சேரி கவர்னராக க தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். இந்நிலையில்,  புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர்  மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக  எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள்  சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது, ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் பிப்.22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டசபையில்  பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமி அரசுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டு உள்ளார்.

சட்டசபையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டு உள்ளார்.

இதை தொடர்ந்து  முதல்வர் நாராயணசாமி  தலைமையில் இன்று  எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் முதலவர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய  கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வரும் 21-ம் தேதி காங்கிரஸ் கூட்டம் மீண்டும் நடைபெறும். ஆட்சிக் கழிப்பு வேலையில் எதிர்கட்சி தலைவர் ரெங்கசாமி தொடர்ந்து ஈடுபடுகிறார். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கை வந்த கலை .

தேர்தல் நேரத்தில் ஆட்சி கவிழ்ப்பை பாஜக தொடங்கியுள்ளது என கூறினார்.

Next Story