வீரதீர பதக்கம் வெல்லும் ஆந்திர பிரதேச ராணுவ வீரர்களுக்கான பரிசு தொகை 10 மடங்கு உயர்வு


வீரதீர பதக்கம் வெல்லும் ஆந்திர பிரதேச ராணுவ வீரர்களுக்கான பரிசு தொகை 10 மடங்கு உயர்வு
x
தினத்தந்தி 19 Feb 2021 4:29 AM GMT (Updated: 19 Feb 2021 4:29 AM GMT)

வீரதீர பதக்கங்களை வெல்லும் ஆந்திர பிரதேச ராணுவ வீரர்களுக்கான பரிசு தொகையை முதல் மந்திரி ஜெகன் 10 மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளார்.

திருப்பதி,

இந்திய ராணுவத்தில் திறம்பட செயலாற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசால் சக்ரா விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில், சக்ரா விருதுகள் வெல்லும் ஆந்திர பிரதேச ராணுவ வீரர்களுக்கான பரிசு தொகையை 10 மடங்கு உயர்த்தி முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.

இதுபற்றி அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருதுகளை வென்றோருக்கு இதுவரை ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டு வந்தது.  இந்த தொகை ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

இதேபோன்று மகா வீர் சக்ரா மற்றும் கீர்த்தி சக்ரா விருதுகளை வென்றவர்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.8 லட்சம் ஊக்க தொகையானது ரூ.80 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வீர் சக்ரா மற்றும் சவுரியா சக்ரா விருதுகளுக்கான மாநில பரிசு தொகையான ரூ.6 லட்சம் ரூ.60 லட்சம் அளவுக்கு உயர்த்தி வழங்கப்படுகிறது.  பணியின்பொழுது உயிரிழக்கும் அனைத்து ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

Next Story