காஷ்மீரில் அடுத்தடுத்து துப்பாக்கி சண்டைகள் 3 போலீசார், 3 பயங்கரவாதிகள் பலி


காஷ்மீரில் அடுத்தடுத்து துப்பாக்கி சண்டைகள் 3 போலீசார், 3 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 19 Feb 2021 8:10 PM GMT (Updated: 2021-02-20T01:40:48+05:30)

காஷ்மீரில் 3 இடங்களில் நடந்த தாக்குதல்களில் 3 போலீசாரும், 3 பயங்கரவாதிகளும் பலியானார்கள்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் யூனியன் பிரதேசம் பட்கம் மாவட்டம் ஜனிகம் கிராமத்தில், யூசுப் கண்ட்ரூ என்ற முக்கிய பயங்கரவாதியும், ஒரு வெளிநாட்டு பயங்கரவாதியும் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த கிராமத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த 2 பயங்கரவாதிகளும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர், எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் காஷ்மீர் சிறப்பு போலீஸ் அதிகாரி முகமது அல்டாப் என்பவர் உயிரிழந்தார். மன்சூர் அகமது என்ற போலீஸ்காரர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சண்டைக்கு பிறகு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ரத்தக்கறை காணப்பட்டது. எனவே, தப்பி ஓடிய 2 பயங்கரவாதிகளும் காயமடைந்திருப்பது தெரிய வந்துள்ளதாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார்.

இதுபோல், சோபியான் மாவட்டம் படிகம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, ராஷ்டிரீய ரைபிள்ஸ், சிறப்பு அதிரடிப்படை, காஷ்மீர் போலீஸ், சி.ஆர்.பி.எப். ஆகியவற்றை சேர்ந்த பாதுகாப்பு படையினர் கூட்டாக அந்த கிராமத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, குறிப்பிட்ட ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், முதலில் தாக்குதல் தொடுத்தனர். பாதுகாப்பு படையினர் அதற்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் பலியானார்கள். சம்பவ இடத்தில் ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே, தலைநகர் ஸ்ரீநகரில் அதிக பாதுகாப்பு நிறைந்த விமான நிலைய சாலையில் பகாட் பகுதியில் 2 போலீசாரை பயங்கரவாதிகள் சற்று நெருங்கி வந்து சுட்டனர். போலீஸ் நிலையம் அருகிலேயே இத்தாக்குதல் நடந்தது.

இதில் காயமடைந்த 2 போலீசாரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். முதலில், சொகைல் என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். சற்று நேரத்தில் மற்றொரு போலீஸ்காரரும் உயிரிழந்தார்.


Next Story