டெல்லியில் கடந்த ஆண்டு 32 பயங்கரவாதிகள் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை


டெல்லியில் கடந்த ஆண்டு 32 பயங்கரவாதிகள் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2021 6:47 AM GMT (Updated: 20 Feb 2021 6:47 AM GMT)

டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பாதித்த காலத்திலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று ஒருபுறம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியபோதிலும், பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை மறுபுறம் தங்கு தடையின்றி நடந்து வந்துள்ளன.

டெல்லி போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை முறியடித்து உள்ளனர்.  கடந்த 2020ம் ஆண்டில் போலீசார் ஐ.எஸ். பயங்கரவாத குழு ஒன்றை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.

போலி இந்திய கரன்சி நோட்டுகள், ஜிகாதி பயங்கரவாதம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது என கூறியுள்ள டெல்லி போலீசார், நவசேவா துறைமுக கன்டெய்னரில் இருந்து 330 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஆண்டில் 33 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 549 பிஸ்டல்கள் மற்றும் துப்பாக்கிகள், 1,505 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.  இதுதவிர 73.3 கிலோ ஹெராயின், 31.6 கிலோ ஓபியம் மற்றும் 233 கிலோ சிந்தெடிக் வகை போதை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

8 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.7.8 லட்சம் மதிப்பிலான போலி இந்திய கரன்சி ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.  கடந்த 2019ம் ஆண்டு 5 பயங்கரவாதிகளும், கடந்த 2018ம் ஆண்டு 8 பயங்கரவாதிகளும், கடந்த 2017ம் ஆண்டு 11 பயங்கரவாதிகளும் மற்றும் கடந்த 2016ம் ஆண்டு 16 பயங்கரவாதிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

ஆனால், கடந்த 2020ம் ஆண்டு 32 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.  அதற்கு முன்புள்ள 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்த எண்ணிக்கை மிக அதிகம் ஆகும்.

Next Story