வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தகவல்


வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2021 9:28 AM GMT (Updated: 20 Feb 2021 9:28 AM GMT)

மராட்டியத்தில் வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என நாசிக் வியாபாரிகள் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

வெங்காய உற்பத்தியில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் மராட்டியத்தில் பருவம் தவறி மழை பெய்தது. அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் அரபிக்கடலில் ஏற்பட்ட கிபுயல் சின்னத்தால் மராட்டியத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் சேதமடைந்தன. 

இந்தநிலையில் வெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,

கடந்த மாதத்தில் மராட்டியத்தில் மீண்டும் பருவம் தவறி பெய்த மழையால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. நாசிக் சந்தையில் பெரிய வெங்காயம் தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 முதல் 4,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story