உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்பு


உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 10:02 AM GMT (Updated: 20 Feb 2021 10:02 AM GMT)

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

டோராடூன்,
 
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந் தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அலெக்நந்தா ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டது. 

இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப்பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை மொத்தம் 62 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 34 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 28 உடல்கள் இன்னும் அடையாளம் கண்டறியப்படவில்லை. இன்னும் மாயமான 142-பேரை காணவில்லை.  வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

விபத்து நடந்து ஒரு வாரமாகி விட்டதால் வெள்ளத்தில் காணாமல் போன பேரின் கதியும் என்னவென்று தெரியவில்லை. பல இடங்களில் சேறும் சகதியுமாகவும் இருப்பதால் மீட்புப்பணி சவாலாக உள்ளது. ஆனாலும், நம்பிக்கையுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. 


Next Story