போலீசார் எதிர்ப்பு: திஷா ரவி ஜாமீன் வழக்கை ஒத்திவைத்த டெல்லி ஐகோர்ட்


போலீசார் எதிர்ப்பு: திஷா ரவி ஜாமீன் வழக்கை  ஒத்திவைத்த டெல்லி ஐகோர்ட்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:32 PM GMT (Updated: 20 Feb 2021 4:01 PM GMT)

காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் திஷா ரவிக்கு தொடர்பு ஜாமீன் வழங்க போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்

புதுடெல்லி

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கடந்த மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். அப்போது ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு செங்கோட்டை கோபுரத்தில் விவசாய சங்க கொடிகளை ஏற்றினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த டூல்கிட்டை உருவாக்கியது பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி மற்றும் மேலும் இருவர் என குற்றம்சாட்டிய போலீசார், அவரை கைது செய்து, தேசத்துரோகம் மற்றும் சதிச்செயல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

இந்தநிலையில் இன்று மீண்டும் திஷா ரவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது திஷா ரவிக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் திஷா ரவி ஜாமீன் கோரி டெல்லி ஐகோட்டில்  மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திஷா ரவிக்கு ஜாமீன் வழங்க போலீஸார் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

போலீஸார் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் " திஷா ரவி காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து டூல் கிட்டை தயாரித்துள்ளார். இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க நடக்கும் உலகளாவிய சதியிலும், விவசாயிகள் போராட்டத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கவும் முயன்றுள்ளார்.

இது உண்மையில் டூல் கிட் அல்ல உலகளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுத்து, அமைதியற்ற சூழலை உருவாக்கும் முயற்சியாகும். அதுமட்டுமல்லாமல் தான் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், ஏற்கெனவே வாட்ஸ்அப் சாட்களையும் மற்ற ஆதாரங்களையும் திஷா ரவி அழித்து விட்டார். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக திஷா ரவி அவரின் வாட்ஸ்அப் சாட்களை அழிக்க வேண்டும். அவரின் குற்ற உணர்வுதான் காரணம்" எனத் தெரிவித்தனர்.

கூடுதல் அமர்வுகள் நீதிபதி தர்மேந்திர ராணா, "ஏதேனும் ஆதாரம் உள்ளதா அல்லது நாம் ஊகங்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் செயல்படுகிறோமா?"  என கேட்டார்.

இதற்கு, டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏ.எஸ்.ஜி) எஸ்.வி.ராஜு, அந்த ஆவணத்தை அதில் உள்ள ஹேஷ்டேக்குகள் மற்றும் இணைப்புகளுடன் படிக்க வேண்டும் என்று பதிலளித்தார், இதன் பொருள் "மக்களை வீதிகளில் வரும்படி தூண்டுகிறது என கூறினார்.

Next Story