கேரளா, மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரிப்பு


கேரளா, மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 6:33 PM GMT (Updated: 20 Feb 2021 6:33 PM GMT)

கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் பல நாடுகளை கொரோனா தொற்று இன்னும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், இந்தியாவில் அதன் வீரியம் ஏற்கனவே குறையத் தொடங்கி விட்டது.

தினமும் 15 ஆயிரத்துக்கு குறைவான புதிய தொற்றுகளே கடந்த சில வாரங்களாக கண்டறியப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த ஒரு சில நாட்களாக சுமார் 10 ஆயிரம் என்ற வகையில்தான் புதிய பாதிப்புகள் இருந்து வருகிறது.

ஆனால் கடந்த சுமார் 22 நாட்களுக்கு பின் முதல் முறையாக நேற்றைய ஆய்வில் சுமார் 14 ஆயிரம் பேர் புதிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது மருத்துவத்துறையினருக்கும், அரசுகளுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கடைசியாக கடந்த மாதம் 29-ந் தேதி 18,855 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு தற்போதுதான் இவ்வளவு அதிகம் போ் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 13,993 பேரையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 77 ஆயிரத்து 387 ஆகியிருக்கிறது.

புதிய பாதிப்புகளை பொறுத்தவரை கேரளா, மராட்டியம், பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் கடந்த சில நாட்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதில் சத்தீஷ்காரில் கடந்த 7 நாட்களாக படிப்படியாக புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் பல நாட்களுக்கு பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவில் சிக்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில் நேற்றைய புதிய பாதிப்புகளில் 75.87 சதவீதத்தினரை கேரளாவும், மராட்டியமும்தான் பெற்றிருக்கின்றன. இதைப்போல பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கொரோனாவிடம் மீண்டும் வலுவாக சிக்கி வருகின்றன.

நாடு முழுவதும் மேற்படி 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆகும். இதில் அதிகபட்சமாக 44 பேர் மராட்டியர்கள் ஆவர். மேலும் கேரளாவில் 15 பேரும், பஞ்சாப்பில் 8 பேரும் மேற்படி 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 212 ஆகியிருக்கிறது. எனினும் நாட்டின் கொரோனா மரண விகிதம் 1.42 ஆகவே நீடிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 97.27 சதவீதத்தினர் மீண்டுவிட்டனர். நேற்று காலை நிலவரப்படி 1 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 48 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதேநேரம் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையோ 1.27 சதவீதமாக சரிந்துள்ளது. அதாவது வெறும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 127 பேர் மட்டுமே நேற்று காலை நிலவரப்படி சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே இந்தியாவில் மிகவும் வேகமாக நடத்தப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 21 கோடியை கடந்து விட்டது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட 7 லட்சத்து 86 ஆயிரத்து 618 பரிசோதனைகளையும் சேர்த்து, இந்தியாவின் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 21 கோடியே 2 லட்சத்து 61 ஆயிரத்து 480 ஆக அதிகரித்து இருக்கிறது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.


Next Story