பா.ஜ.க. ஆளும் ம.பி.யில் முதல்-மந்திரியை கொசு கடிப்பதா? பொதுப்பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை


பா.ஜ.க. ஆளும் ம.பி.யில் முதல்-மந்திரியை கொசு கடிப்பதா? பொதுப்பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2021 8:29 PM GMT (Updated: 20 Feb 2021 8:29 PM GMT)

முதல்-மந்திரியின் தூக்கத்தை கொசுக்களும், மூட மறந்து விட்ட குழாயும் கெடுத்தது அறிந்து அவர் உடனடியாக பொதுப்பணித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

போபால்,

பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் சிதி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பஸ் ஒன்று, கால்வாயில் கவிழ்ந்து நிகழ்ந்த கோர விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம், அந்த மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

விபத்தில் பலியானோரின் குடும்பங்களை முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாள் முழுக்க கிராமம், கிராமமாக சென்று ஆறுதல் கூறியதில், அவருக்கு சோர்வு ஏற்பட்டது. எனவே அன்றைய இரவை சிதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கழிக்க முடிவு செய்தார்.

பாவம், அந்த இரவு முதல்-மந்திரிக்கு உறக்கம் வராத இரவாக மாறிப்போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான்.

அவரை இரவு முழுவதும் கொசுக்கள் அணி அணியாக வந்து பதம் பார்த்தன. அத்துடன் யாரோ குழாயை மூட மறந்து விட தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்து அது வேறு அவருக்கு தொல்லையாக அமைந்து இருக்கிறது.

ஒரு கட்டத்தில் முதல்-மந்திரியே பராமரிப்பு ஊழியரை அழைத்து குழாயை மூடுமாறு அறிவுறுத்த நேர்ந்திருக்கிறது.

இப்படியாக அந்த இரவில் முதல்-மந்திரியின் தூக்கம் பறிபோனது ரேவா கோட்டாட்சி தலைவர் ராஜேஷ்குமார் ஜெயின் கவனத்துக்கு சென்றது.

முதல்-மந்திரியின் தூக்கத்தை கொசுக்களும், மூட மறந்து விட்ட குழாயும் கெடுத்தது அறிந்து அவர் உடனடியாக பொதுப்பணித்துறை என்ஜினீயர் தவேந்திரகுமார் சிங்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதில் அவரது 2 வருட சம்பள உயர்வை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது என கேள்வி எழுப்பி இதற்கு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபற்றிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

அதைத்தொடர்ந்து ரேவா கோட்டாட்சி தலைவர் ராஜேஷ்குமார் ஜெயினை நிருபர்கள் தொடர்பு கொண்டு விசாரிக்க, பொதுப்பணித்துறை என்ஜினீயர் மீதான நடவடிக்கையை முதலில் மறுத்தவர், பின்னர் நோட்டீஸ்தான் அனுப்பப்பட்டுள்ளது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சப்பை கட்டு கட்டினார்.

இந்த விஷயத்தில், முதல்-மந்திரியை பார்வையாளர்கள் பலரும் சந்திக்க வந்து, அறை கதவு திறந்து கிடந்ததால்தான் கொசுக்கள் படை எடுத்தன என கூறி அரசு விருந்தினர் மாளிகை பராமரிப்பு ஊழியர்கள்,, உயர் அதிகாரிகளை சமாதானப்படுத்த முயற்சிப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.


Next Story