தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு 4,500 துணை ராணுவ வீரர்கள் மத்திய அரசு முடிவு


தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு 4,500 துணை ராணுவ வீரர்கள் மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 20 Feb 2021 9:30 PM GMT (Updated: 20 Feb 2021 9:30 PM GMT)

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு 4 ஆயிரத்து 500 துணை ராணுவ வீரர்களை கொண்டு வருவதென்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

அதேநேரம் இந்த தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.

இந்த ஆலோசனையை தொடர்ந்து இந்த 4 மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேச தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 250 கம்பெனி மத்திய ஆயுதப்படைகளை அதாவது சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப். உள்ளிட்ட படைகள் அடங்கிய நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதில் 125 கம்பெனிகள் மேற்கு வங்காளத்துக்கு அனுப்பப்படுகிறது. மேலும் தமிழகத்துக்கு 45, கேரளாவுக்கு 30, அசாமுக்கு 40, புதுச்சேரிக்கு 10 கம்பெனி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.

ஒரு கம்பெனி என்பது சுமார் 100 வீரர்கள் அடங்கிய பிரிவாகும். அந்தவகையில் 25 ஆயிரம் மத்திய ஆயுதப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதில் தமிழகத்துக்கு 4 ஆயிரத்து 500 பேர் வருகை தர உள்ளனர்.


Next Story