எரிபொருள் விலை உயர்வுக்கு 2 காரணங்கள்: மத்திய மந்திரி விளக்கம்


எரிபொருள் விலை உயர்வுக்கு 2 காரணங்கள்:  மத்திய மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2021 2:03 PM GMT (Updated: 21 Feb 2021 2:03 PM GMT)

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான 2 காரணங்களை மத்திய பெட்ரோலிய துறை மந்திரி விளக்கம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.  இதேபோன்று சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் டெல்லியில் உயர்த்தப்பட்டது.  இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எரிபொருள் விலை உயர்வை வாபஸ் பெற கோரி போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

நாட்டின் தலைநகர் டெல்லியில், மகளிர் காங்கிரசார் சாலையில் சமையல் செய்தும், இளைஞர் காங்கிரசார் சட்டைகளை கழற்றி போராட்டம் நடத்தியும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனையானது.  இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து, ரூ.100.13-க்கு விற்பனை செய்யப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த மாதம் வாட் வரி ரூ.2 குறைக்கப்பட்ட நிலையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதேபோன்று மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை சதமடித்தது.

நாட்டில் எரிபொருள் விலை உயர்வு பற்றி மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் இன்று அளித்துள்ள பேட்டியில், எரிபொருள் விலை உயர்வுக்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன.

சர்வதேச சந்தையில் எரிபொருள் உற்பத்தி குறைந்துள்ளது.  எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அதிக லாபம் ஈட்டுவதற்காக குறைவான அளவில் எரிபொருளை உற்பத்தி செய்கின்றன.  இதனால் நுகர்வோர் நிலையில் உள்ள நாடுகள்  அதிகம் பாதிக்கப்படுகின்றன.

இது நடக்க கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  இதில் மாற்றம் வரும் என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.  கொரோனாவும் மற்றொரு காரணம்.  பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி சேகரிக்கின்றன.

வளர்ச்சி பணிகளுக்கு செலவிடுவது அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.  அரசு முதலீடுகளை அதிகரித்துள்ளது.  இந்த பட்ஜெட்டில் 34% கூடுதலாக மூலதனத்திற்கு செலவிடப்படும்.  மாநில அரசுகளும் செலவை அதிகரிக்கும்.  அதனால் இந்த வரி அவசியம் ஆகிறது.  ஆனால் அதில் சமநிலையும் தேவையாக உள்ளது.  இதற்கு நிதி மந்திரி ஒரு வழி கண்டறிந்திடுவார் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story