தேசிய செய்திகள்

பள்ளி மாணவன் உள்பட 2 பேரை கொன்ற புலி + "||" + Tiger kills 2 person including school student

பள்ளி மாணவன் உள்பட 2 பேரை கொன்ற புலி

பள்ளி மாணவன் உள்பட 2 பேரை கொன்ற புலி
பொன்னம்பேட்டை தாலுகாவில் அடுத்தடுத்த 2 நாட்களில் ஒரு புலி, பள்ளி மாணவன் மற்றும் ஒரு பெண்ணை கொன்றுள்ளது.அந்த புலியை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
குடகு:

பொன்னம்பேட்டை தாலுகாவில் அடுத்தடுத்த 2 நாட்களில் ஒரு புலி, பள்ளி மாணவன் மற்றும் ஒரு பெண்ணை கொன்றுள்ளது.அந்த புலியை வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

பள்ளி மாணவன்

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா டி.செட்டிகேரி கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னி(வயது 60) என்ற பெண்ணை, புலி ஒன்று அடித்துக் கொன்றது. இந்த நிலையில் பொன்னம்பேட்டை தாலுகாவில் அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. 

பொன்னம்பேட்டை தாலுகா ஸ்ரீமங்கலா அருகே குமட்டூரு கிராமத்தில் வசித்து வருபவர் பசவா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு காபித்தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அய்யப்பா(14). இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலையில் சிறுவன் அய்யப்பா, கோட்ராங்கடா பகுதியில் உள்ள அஸ்வத் என்பவருக்கு சொந்தமான காபித்தோட்டதிற்கு சென்று அங்கு வெள்ளரிக்காய்களை பறித்துக் கொண்டிருந்தான். 
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி, அந்த காபித்தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் அந்த புலி இரை தேடி பதுங்கி இருக்கிறது. இதையறியாத அய்யப்பா, தொடர்ந்து அங்கு வெள்ளரிக்காய்களை பறித்துக் கொண்டிருந்தான். 

புலி அடித்து கொன்றது

அந்த சந்தர்ப்பத்தில் புதரில் பதுங்கி இருந்த புலி, திடீரென சிறுவன் அய்யப்பாவின் மீது பாய்ந்து சரமாரியாக தாக்கியது. மேலும் அவனை கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் அய்யப்பா சம்பவ இடத்திலேயே பலியானான். இதையடுத்து அவனது உடலை கடித்து தின்ற அந்த புலி பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. 

இந்த நிலையில் தனது மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பசவா, அவனைத்தேடி அஸ்வத்தின் காபித்தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு தனது மகன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

கிராம மக்கள் பீதி

உடனடியாக அவர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு புலி வந்து சென்றிருப்பதையும், புலி தாக்கிதான் அய்யப்பா உயிரிழந்து இருப்பதையும் உறுதி செய்தனர். பின்னர் சிறுவன் அய்யப்பாவின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த புலியை பிடிக்க அப்பகுதியில் இரும்பு கூண்டுகளையும் வனத்துறையினர் வைத்துள்ளனர். 2 கும்கி யானைகளை வரவழைத்து அவற்றின் உதவியுடன் வனத்துறையினர் அந்த புலியை பிடிக்க வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். அடுத்தடுத்த 2 நாட்களில் பெண் உள்பட 2 பேரை புலி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கிராம மக்களும் பீதியில் உள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் ஒருவர் கூறியதாவது:-
கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலி தற்போது மனிதர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. உடனடியாக அந்த புலியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கும்கி யானைகள் வரவழைப்பு 

ஏற்கனவே அந்த புலி கடந்த 2 நாட்களுக்கு முன்பு டி.செட்டிகேரி கிராமத்தைச் சேர்ந்த சோமண்ணா என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சின்னி என்ற பெண்ணை கொன்றுள்ளது. 

தற்போது அந்த புலியை பிடிக்க அபிமன்யு, கோபாலசாமி ஆகிய 2 கும்கி யானைகளை வரவழைத்துள்ளோம். கும்கி யானைகளுடன் 30 பேர் கொண்ட வனத்துறையினர் குழுவினர் அந்த புலியை பிடிக்க வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். 

சாலைமறியல்

இந்த நிலையில் நேற்று காலையில் விவசாயிகள் சங்கத்தினர் ஸ்ரீமங்கலாவில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காட்டுயானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரும், போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து அரசு சார்பில் புலியால் கொல்லப்பட்ட சின்னி மற்றும் அய்யப்பாவின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.