தேசிய செய்திகள்

கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலி + "||" + Cars collision 5 people killed

கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலி

கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலி
ஹாசன் புறநகரில் நேற்று அதிகாலையில் 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் பலியானார்கள். 4 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஹாசன்:

ஹாசன் புறநகரில் நேற்று அதிகாலையில் 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் பலியானார்கள். 4 பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

கோலார் தங்கவயலை சேர்ந்தவர்கள்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் தனது குடும்பத்தினர் சந்திரசேகர், நவீன் குமார், சுனில் குமார், அனில்குமாா் உள்பட 8 பேருடன் ஒரு காரில் உடுப்பி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். காரை பிரதீப் குமார் ஓட்டினார். அவர்கள் உடுப்பி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர். 

அவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஹாசன் (மாவட்டம்) புறநகர் கெஞ்சட்டள்ளி அருகே பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முன்னால் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. 

கார்கள் மோதல்

திடீரென அந்த கார் டிரைவர் வேகத்தடை வந்ததால் காரை நிறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப் குமாரும் காரை நிறுத்தி இருக்கிறார். ஆனால் அவருடைய கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. மேலும் மோதிய வேகத்தில் 2 கார்களும் கவிழ்ந்தன. 

இந்த கோர விபத்தில் 2 கார்களில் பயணித்து வந்த 18 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரதீப் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்திரசேகர், நவீன் குமார், சுனில் குமார், அனில்குமார் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

13 பேர் படுகாயம்

இந்த கோர சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்களும், அந்த வழியாக சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்திருந்த 4 பெண்கள் உள்பட 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மட்டும் மேல்சிகிச்சைக்காக உடுப்பி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஹாசன் டவுன் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பிரதீப் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்ததும், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்திருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி மற்றொரு காரில் வந்த 4 பெண்கள் உள்பட 10 பேரும் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

தீவிர சிகிச்சை 

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ்கவுடா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலைச் சேர்ந்த பிரதீப் குமார் தனது குடும்பத்தினருடன் உடுப்பி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள காரில் வந்துள்ளார். அதேபோல் கோலார் மாவட்டம் முல்பாகலைச் சேர்ந்த 10 பேர் ஒரு காரில் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவுக்கு வந்துள்ளனர். 

ஹாசன் புறநகர் பகுதியில் வந்தபோது விபத்தில் 2 கார்களும் சிக்கி உள்ளன. தற்போது விபத்தில் காயம் அடைந்த 13 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியான பிரதீப் குமார் உள்பட 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.