இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் எதிரொலி: விதான சவுதாவை சுற்றி 144 தடை; பெங்களூரு போலீஸ் கமிஷனர் உத்தரவு


இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் எதிரொலி: விதான சவுதாவை சுற்றி 144 தடை; பெங்களூரு போலீஸ் கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 21 Feb 2021 9:59 PM GMT (Updated: 21 Feb 2021 9:59 PM GMT)

இடஒதுக்கீடு கேட்டு பஞ்சமசாலி சமூகத்தினர் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

2 ஏ பிரிவில்....
வீரசைவ லிங்காயத்தின் ஒரு பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களை 2 ஏ பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி, கூடலசங்கமத்தில் இருந்து மடாதிபதி தலைமையில் பாதயாத்திரை புறப்பட்டு பெங்களூரு வந்தனர்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று இடஒதுக்கீடு கேட்டு மாநாடு நடந்தது. இதில் மந்திரிகள் சி.சி.பட்டீல், முருகேஷ் நிரானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மாநாடு முடிந்ததும் வருகிற 4-ந் தேதி வரை பெங்களூரு சுதந்திர பூங்காவில் தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

144 தடை உத்தரவு
இடஒதுக்கீடு கேட்டு பஞ்சமசாலி சமூகத்தினர் மாநாடு நடத்தினர். அந்த மாநாட்டை அடுத்து சுதந்திர பூங்காவில் வருகிற 4-ந் தேதி வரை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். மேலும் விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் 21-ந் தேதி (நேற்று) மாலை 6 மணி முதல் 22-ந் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி வரை விதான சவுதா மற்றும் அதனை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் விதான சவுதா அருகே 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கும்பலமாக செல்லவோ, பாதயாத்திரை, பேரணி, கூட்டம் நடத்தவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. உருவபொம்மை எடுத்து சென்று எரிப்பதற்கும் தடை உள்ளது. பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து 
செல்லவும், கட்-அவுட்டுகள், பேனர்கள், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Next Story