கொரோனா தடுப்பூசிகள் போடுவதில் கூடுதல் வேகம் தேவை - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


கொரோனா தடுப்பூசிகள் போடுவதில் கூடுதல் வேகம் தேவை - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 Feb 2021 1:51 AM GMT (Updated: 22 Feb 2021 1:51 AM GMT)

கொரோனா தடுப்பூசிகள் போடுவதில் வேகத்தை அதிகரிக்்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அளித்தது.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணியை கடந்த 16-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நேற்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 30 ஆயிரத்து 888 அமர்வுகளில் 1 கோடியே 10 லட்சத்து 85 ஆயிரத்து 173 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவற்றில் முதல் டோஸ் தடுப்பூசி 63 லட்சத்து 91 ஆயிரத்து 544 சுகாதார பணியாளர்களுக்கும், 37 லட்சத்து 32 ஆயிரத்து 987 முன் கள பணியாளர்களுக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி 9 லட்சத்து 60 ஆயிரத்து 642 சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் மாநிலங்கள் தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் காட்ட வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

இதில் அவர் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் இவைதான்:-

* அதிக எண்ணிக்கையிலான சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலை உள்ளது. இதில் முன்னேற்றம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

* அடுத்த முன்னுரிமை பயனாளிகளான 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உடையோருக்கு மார்ச் மாதம் தடுப்பூசி போடுவதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் இறுதி செய்யப்படுகின்றன.

* இனி வரும் நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பயன்பெறும் வகையில் தடுப்பூசிகளை போடுவதில் அதிக வேகம் காட்ட வேண்டும்.

* தடுப்பூசி போடும் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும். வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

* மருத்துவ கல்லூரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகள், உட்கோட்ட ஆஸ்பத்திரிகள், சுகாதாரம் மற்றும் நல மையங்கள், சுகாதார துணை மையங்கள் ஆகியவற்றில் மார்ச் 1-ந் தேதி முதல் அனைத்து தடுப்பூசி போடும் நாட்களிலும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.

* கொரோனா வைரஸ் தடுப்பூசி பணியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உடனே மேற்கொள்வதற்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story