தடுப்பூசி போடுவதற்கு கூடுதல் டோஸ்கள் வேண்டும் - மத்திய அரசுக்கு, கேரளா சுகாதார மந்திரி கடிதம்


தடுப்பூசி போடுவதற்கு கூடுதல் டோஸ்கள் வேண்டும் - மத்திய அரசுக்கு, கேரளா சுகாதார மந்திரி கடிதம்
x

தடுப்பூசி போடுவதற்கு கூடுதல் டோஸ்கள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கேரளா சுகாதார மந்திரி சைலஜா கடிதம் எழுதியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் நேற்று வரை 3,36,327 (திருத்தப்பட்ட இலக்கில் 94 சதவீதம்) சுகாதார பணியாளர்கள், 57,658 (38 சதவீதம்) முன்கள பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மேலும் 23,707 சுகாதார பணியாளர்கள் 2-வது டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர்.

இந்த பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், மாநிலத்துக்கு கூடுதல் டோஸ்கள் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார மந்திரிக்கு மாநில சுகாதார மந்திரி சைலஜா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் நாட்டிலேயே அதிக முதியவர்களை கொண்ட மாநிலம் கேரளா என்பதை சுட்டிக்காட்டியுள்ள சைலஜா, எனவே தடுப்பூசி போடுவதில் 3-வது முன்னுரிமைதாரர்களான 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கு கூடுதல் டோஸ்கள் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த பிரிவினர் தடுப்பூசிக்காக பதிவு செய்யும் வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடுமாறும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதைத்தவிர ஏற்கனவே விடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story