கொரோனா தாக்கம் அதிகரிப்பு: ‘பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்’ - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


கொரோனா தாக்கம் அதிகரிப்பு: ‘பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்’ - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
x
தினத்தந்தி 22 Feb 2021 5:01 AM GMT (Updated: 22 Feb 2021 5:01 AM GMT)

கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதே போன்று கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்குள் இருந்தாலும் கூட, கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

தற்போது சிகிச்சை பெறுவோரில் 74 சதவீதத்தினர் கேரளாவிலும், மராட்டியத்திலும் உள்ளனர். மேலும், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

இந்த கடிதத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கடுமையான மற்றும் விரிவான கட்டுப்பாடுகளையும், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளையும் விதித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும், வைரஸ் உருமாற்றம் கண்டறிவதற்கு தொடர்ந்து கண்காணித்து, மரபணு வரிசைப்படுத்த வேண்டும், புதிதாக உருவாகிற கொரோனா திரள் பகுதிகளை கண்காணிக்க வேண்டும், சாவு அதிகமாக உள்ள பகுதிகளில் தரமான சிகிச்சையின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story