கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருமண நிகழ்ச்சிகளை கண்காணிக்க மார்ஷல்கள் நியமனம்; கர்நாடக மந்திரி சுதாகர் பேட்டி


கர்நாடக  சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
x
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
தினத்தந்தி 22 Feb 2021 5:40 PM GMT (Updated: 22 Feb 2021 5:50 PM GMT)

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருமண நிகழ்ச்சிகளை கண்காணிக்க மார்ஷல்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

மந்திரி ஆலோசனை
மராட்டியம் மற்றும் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், கொரோனா விதிமுறைகளை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தும் படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மார்ஷல்கள் நியமனம்
மராட்டியம் மற்றும் கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருமண நிகழ்ச்சிகளில் கொரோனா விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. திருமணத்தில் கலந்து கொள்ளும் நபர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசமும் அணிவதில்லை.

இதுபோன்ற விதிமுறைகள் மீறுவதை கண்டுபிடிக்க திருமண நிகழ்ச்சிகளை கண்காணிக்க மார்ஷல்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. திருமண நிகழ்ச்சிகளில் சமையல் செய்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் முகக்கவசம் அணிவதுடன், கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும்.

கடுமையான நடவடிக்கைகள்
கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்காத பட்சத்தில் நமது மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை வரும். அதற்கு மக்கள் இடம் அளிக்க கூடாது. கொரோனா பரவலை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறையில் 4 லட்சத்து 24 ஆயிரத்து 573 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சுகாதாரத்துறையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சிலர் 2 முறை விண்ணப்பித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவும் பீதி உருவாகி இருப்பதால் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது படிப்படியாக நடைபெறும். இந்த விவகாரத்தில் அரசும், கல்வித்துறையும் அவசரம் காட்டாது. கொரோனா தடுப்பூசி 2-வது கட்டமாக போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story