வாகனம், தொழிற்சாலைகள் பெருக்கம் எதிரொலி; பெங்களூருவில் அதிகரித்து வரும் நச்சுப்புகை


வாகனம், தொழிற்சாலைகள் பெருக்கம் எதிரொலி; பெங்களூருவில் அதிகரித்து வரும் நச்சுப்புகை
x
தினத்தந்தி 22 Feb 2021 6:10 PM GMT (Updated: 22 Feb 2021 6:10 PM GMT)

இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களூரு மாநகரமும் ஒன்றாகும்.

குப்பை கழிவுகள்
சுமார் 1½ கோடி மக்கள் தொகை கொண்டிருக்கும் பெங்களூரு நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் சாரை, சாரையாக சொந்த ஊரை நோக்கி வெளியேறினர். இதனால் மக்கள் தொகை ஒரு கோடியாக குறைந்தது. ஆனால், தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் பெருக்கம் அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் வளர்ச்சி அடையும் நகரங்களில் பெங்களூரு நகரம் இடம் பெற்றிருந்தாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு விவகாரத்தில் பெங்களூரு நகரம் நாட்டிலேயே 3-வது இடத்தை பிடித்துள்ளது.

பெங்களூரு நகரில் பொது இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகளில் கொண்டு சென்று அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் கொட்டப்படுவது வழக்கம். ஆனால், குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுனர்கள் அவற்றை உரிய இடத்தில் கொண்டு சென்று கொட்டாமல் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கொட்டி தீ வைத்துவிடுகின்றனர்.

நச்சுப்புகை அதிகரிப்பு
குப்பைகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் பெங்களூரு நகரில் தென்கிழக்கு மண்டலத்தில் இரவு நேரங்களில் நிகழ்வதாக அப்பகுதியை சேர்ந்த லட்சுமி கலா என்பவர் குற்றம் சாட்டுகிறார். இதனால், நச்சு புகை அதிகரித்து மூச்சுச்திணறல் ஏற்படுகிறது. இதே குற்றச்சாட்டை இப்பகுதியை சேர்ந்த மேலும், பல பெண்கள் முன்வைக்கின்றனர்.அதுபோல் பெங்களூரு நகரில் தொழிற்சாலைகளில் இருந்து நச்சுப்புகை வெளியேறுகிறது என்றால், வாகனங்கள் அதிகரிப்பால் அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை நகர மக்களை வெகுவாக பாதிக்கிறது. இப்படி பல வழிகளில் நச்சுப்புகை வெளியேறுவதால், மூச்சுத் திணறல், இருமல், தும்மல் போன்ற தொல்லைகள் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

12 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இதனால், கடந்த ஆண்டு (2020) பெங்களூரு நகரில் நச்சுப்புகையால் மூச்சுத்திணறி 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்தும், குப்பைகளை எரிப்பதாலும் நச்சுப் புகை வெளியேறி அதிக பாதிப்பை ஏற்படுத்துவதை கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை கமிஷனர் ஆர்.வெங்கடாசலபதி உறுதி செய்தார்.

கடந்த ஆண்டு நச்சுப் புகை அதிகரிப்பால் இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லியில் 54 ஆயிரம் பேரும், மும்பையில் 25 ஆயிரம் பேரும், பெங்களூருவில் 12 ஆயிரம் பேரும், ஐதராபாத்தில 11 ஆயிரம் பேரும், சென்னையில் 11 ஆயிரம் பேரும், லக்னோவில் 6,700 பேரும் உயிரிழந்து இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மக்கள்விழிப்புணர்வு
பசுமையை அதிகரித்து சுற்றுச்சூல் மாசு அடைவதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சுற்றுப்புற சூழலை மேம்படுத்த டெல்லிக்கு ரூ.58,000 கோடியும், மும்பைக்கு ரூ.26,912 கோடியும், பெங்களூருவுக்கு ரூ.12,365 கோடியும், ஐதராபாத்துக்கு ரூ.11,637 கோடியும், சென்னைக்கு ரூ.10,910 கோடியும், லக்னோவுக்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழலை பேணி காப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் கொரோனா பாதிப்பால் 5 மாதங்களுக்கு மேலாக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கடந்த 3 மாதங்களாக திடீரென நகரில் நச்சுப் புகை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசுகள் மட்டும் முயற்சி செய்தால் சாத்தியமாகாது. மக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை கட்டாயம் தடுக்கலாம்.

Next Story