கர்நாடகத்தில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை தடை செய்ய தயங்குவது ஏன்? கர்நாடக அரசுக்கு சித்தராமையா கேள்வி


சித்தராமையா
x
சித்தராமையா
தினத்தந்தி 22 Feb 2021 6:20 PM GMT (Updated: 22 Feb 2021 6:20 PM GMT)

கர்நாடகத்தில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை தடை செய்யாமல் இருப்பது ஏன்? என கர்நாடக அரசுக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்தராமையா பேட்டி
உடுப்பி, மங்களூருவில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மங்களூருவுக்கு விமானம் மூலம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தடை செய்யாதது ஏன்?
கர்நாடகத்தில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.), எஸ்.டி.பி.ஐ. அமைப்புகள் பா.ஜனதாவின் பி டீம் போல் செயல்படுகின்றது. இந்த அமைப்புகளை இதுவரை பா.ஜனதா அரசு தடை செய்யவில்லை. இதற்கு அந்த அமைப்புகள் பா.ஜனதாவின் பி டீமாக செயல்படுவது தான் காரணம்.அந்த அமைப்பினர் என்னென்ன செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது பா.ஜனதாவினருக்கு தெரியும். கர்நாடகத்தில் அந்த அமைப்புகளை கர்நாடக பா.ஜனதா அரசு தடை செய்யாமல் இருப்பது ஏன்?. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அந்த அமைப்புகளை தடை செய்ய பா.ஜனதாவினர் தான் கோரினர். ஆனால் இப்போது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறார்கள்.

ஆட்சி கவிழ்ப்பு கண்டிக்கத்தக்கது
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை பா.ஜனதாவினர் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதலே ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பதவிக்காலம் மே மாதம் முடிவடையும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியை பா.ஜனதாவினர் கவிழ்த்துள்ளனர். நாராயணசாமி ஆட்சியில் இருந்தால், அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைத்து இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். எப்படி இருந்தாலும் வருகிற புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை கவிழ்த்தது கண்டிக்கத்தக்கது. 
இதற்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story