பையப்பனஹள்ளியில் ரூ.314 கோடியில் கட்டப்பட்டு வரும் விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம் பணி இறுதி கட்டத்தை எட்டியது; மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்


பையப்பனஹள்ளியில் ரூ.314 கோடியில் கட்டப்பட்டு வரும் விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம் பணி இறுதி கட்டத்தை எட்டியது; மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்
x
தினத்தந்தி 22 Feb 2021 6:36 PM GMT (Updated: 22 Feb 2021 6:36 PM GMT)

பையப்பனஹள்ளியில் ரூ.314 கோடியில் கட்டப்பட்டு வரும் விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மார்ச் இறுதியில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

ரெயில் முனையம்
வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து பெங்களூரு சிட்டி மற்றும் யஸ்வந்தபுரம் ெரயில் நிலையங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் வருகின்றன. இந்த ரெயில்களில் வரும் பயணிகள் இறங்கிய பின் ரெயில்கள் பெங்களூரு சிட்டி, மற்றும் யஸ்வந்தபுரம், கண்டோன்மென்ட் ெரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகின்றன. இங்கிருந்து புறப்பட்டு, மேற்கண்ட ரெயில் நிலையங்களுக்கு மீண்டும் புறப்பட காலதாமதம் ஆவதுடன், போக்குவரத்தில் குளறுபடிகள் ஏற்படுகின்றன.

இதை தவிர்த்து வெளியில் இருந்து வரும் ரெயில்கள் பையப்பனஹள்ளியில் நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.314 கோடி செலவில் நவீனவசதிகளுடன் உலகத்தரத்தில் விஸ்வேசுவரய்யா முனையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2015-16-ம் ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டதே தவிர நடைமுறைப்படுத்தவில்லை. பின்னர், இந்திய ரெயில் நிலைய மேம்பாட்டு வளர்ச்சி வாரியம் பையப்பனஹள்ளியில் ரெயில்வே முனையம் அமைக்கும் திட்டத்திற்கு 2017-ம் ஆண்டு அனுமதி அளித்தது. மேலும் அதே ஆண்டில் தனியார் நிறுவனங்களின் நிதி உதவியுடன் இந்த முனையம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

உலக தரத்தில்...
விஸ்வேசுவரய்யா ரெயில் முனையப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற மார்ச் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி உள்ள மண்டுவாகி ெரயில் நிலையம் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதுபோல் உலக தரத்துடன் நவீன வசதிகளுடன் பையப்பனஹள்ளி விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் திறந்துவைக்கிறார்
இந்த ரெயில் முனையம் திறக்கப்பட்ட பின் வெளியூர்களில் இருந்து பையப்பனஹள்ளி மார்க்கமாக பெங்களூரு சிட்டி மற்றும் யஸ்வந்தபுரம் நிலையங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் விஸ்வேசுவரய்யா முனையத்தில் நிறுத்தப்படும். பின்னர், இங்கிருந்து யஸ்வந்தபுரம் மற்றும் சிட்டி ரெயில் நிலையத்திற்கு மெமு ெரயில்களில் பயணிகள் செல்ல வசதிகள் செய்யப்பட உள்ளன.

வருகிற மார்ச் மாதம் இறுதிக்குள் முனையம் அமைக்கும் பணிகள் முடிவடைய இருப்பதால், திறந்து வைக்க வரும்படி பிரதமர் நரேந்திரமோடி அலுவலகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மார்ச் 20 அல்லது 25-ந் தேதி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் சேவை
இது குறித்து பெங்களூரு ரெயில்வே மண்டல மேலாளர் அசோக் குமார் வர்மா கூறுகையில், பல ஆண்டுகளாக விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நவீன வசதிகளுடன் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டு வரும் இந்த முனையத்தில் எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகரிக்க உள்ளதை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்த ரெயில் முனையம் திறக்கப்பட உள்ளது. இதேபோன்ற முனையங்கள் கண்டோன்மென்ட் மற்றும் யஸ்வந்தபுரம் ெரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றார்.

அதுபோல் விஸ்வேசுவரய்யா ரெயில் முனையத்திற்கு வரும் பயணிகள் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வசதியாக இங்கிருந்து ெமட்ரோ ெரயில்சேவை தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

Next Story