கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 22 Feb 2021 7:41 PM GMT (Updated: 22 Feb 2021 7:41 PM GMT)

வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை விசாரிக்கக்கூடாது. ஒருவேளை அனுமதித்தால், கடந்த முறை செய்ததை போல, ரூ.10 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘எம்.பி.யாக இருக்கும் மனுதாரர் ஏன் ரூ.10 கோடி டெபாசிட் செய்ய வேண்டும்? அவர் தப்பிச் செல்லப்போவதில்லை. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆதாரங்களை திருத்த வாய்ப்பில்லை என கண்டறிந்த பிறகே, சுப்ரீம் கோர்ட்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கியது. எவ்வித நிபந்தனையும் இல்லாமல் 2017, 2018 ஆண்டுகளில் மனுதாரர் வெளிநாடு சென்று வந்துள்ளார். வெளிநாடு செல்ல கடந்த 2020-ம் ஆண்டு மட்டுமே நிபந்தனை விதிக்கப்பட்டது’ என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ரூ.2 கோடியை பதிவாளர் அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும், வெளிநாட்டில் செல்லும் இடங்களையும், தங்கும் இடங்களையும் தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தனர். இந்த அனுமதி, 6 மாத காலத்துக்கானது என்றும் தெளிவுபடுத்தினர்.

Next Story