அவதூறு வழக்கில் திக்விஜய்சிங் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு - ஐதராபாத் கோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Feb 2021 8:33 PM GMT (Updated: 22 Feb 2021 8:33 PM GMT)

அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு உத்தரவை ஐதராபாத் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.

ஐதராபாத்,

மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய்சிங் மீது அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கடந்த 2017-ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தது. 

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, பண ஆதாயத்துக்காகவே பிற மாநில தேர்தல்களில் போட்டியிடுவதாக திக்விஜய் சிங் கூறியதற்காக இவ்வழக்கு தொடரப்பட்டது. ஐதராபாத்தில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் தனி கோர்ட்டில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. 

இந்த சூழலில் பிப்., 22-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று திக்விஜய்சிங்குக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், திக்விஜய்சிங் நேற்று ஆஜராகவில்லை. நேரில் ஆஜராக விலக்கு கோரி அவரது வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திக்விஜய் சிங்குக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி மார்ச் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Next Story