மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு; 1-ந் தேதி முதல் அமல்


மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு; 1-ந் தேதி முதல் அமல்
x
தினத்தந்தி 22 Feb 2021 9:32 PM GMT (Updated: 22 Feb 2021 9:32 PM GMT)

மும்பை பெருநகர பகுதியில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கட்டணம் உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்ந்து உள்ளது. ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டு உள்ளது. இதனால் சாதாரண மக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் மும்பை பெருநகர பகுதியில் ஆட்டோ, டாக்சி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.18 ஆக இருந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.3 உயர்த்தப்பட்டு ரூ.21 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறைந்தப்பட்ச கட்டணம் 1.5 கி.மீ.க்கு வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு கி.மீ. தூரத்திற்கும் ஆட்டோ பயணிகள் 14 ரூபாய் 20 காசுகள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

டாக்சி கட்டணம்
இதேபோல குறைந்தபட்ச டாக்சி கட்டணம் ரூ.22-ல் இருந்து ரூ.25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச தூரத்திற்கு பிறகு ஒவ்வொரு கி.மீ.க்கும் கட்டணமாக 16 ரூபாய் 93 காசுகள் டாக்சி பயணிகள் கொடுக்க வேண்டும்.இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) அனுமதி அளித்து உள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வு
இந்த தகவலை மாநில போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் உறுதிப்படுத்தினார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு நீண்ட காலத்துக்கு பிறகு தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.கட்டண, உயர்வுக்கு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறுகையில்,"பெட்ரோல், டீசல், கியாஸ் விலை, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்ந்த போதும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பைசா கூட கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் மிகுந்த அவதி அடைந்தோம். கொரோனா காலத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வருமானமே கிடையாது. இந்த கட்டண உயர்வால் எங்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புகிறோம்" என்றார்.

Next Story