வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: ‘மக்கள் திரண்டபோது அரசுகள் மாறியிருக்கின்றன’; மத்திய மந்திரிக்கு விவசாய தலைவர் பதிலடி


விவசாய அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத்
x
விவசாய அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத்
தினத்தந்தி 22 Feb 2021 11:31 PM GMT (Updated: 22 Feb 2021 11:31 PM GMT)

மக்கள் திரண்டபோது அரசுகளே மாறியிருப்பதாக மத்திய மந்திரிக்கு விவசாய அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் பதிலடி அளித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் 3 மாதங்களை நெருங்கி விட்டது. இந்த போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. மாறாக விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மத்திய அரசு தயார்
இந்தநிலையில் குவாலியரில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார். மேலும் புதிய சட்டங்களில் எந்த வழிமுறைகள் விவசாயிகளுக்கு எதிராக இருகின்றன என்பதை அரசுக்கு விவசாயிகள் தெரியப்படுத்த வேண்டும் எனக்கூறிய அவர், வெறும் கூட்டத்தை கூட்டுவது மட்டும் சட்டங்களை திரும்பப்பெற வழிவகுக்காது என்றும் கண்டனம் தெரிவித்தார்.

ஒரு பொருட்டல்ல
மத்திய மந்திரியின் இந்த கருத்து விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் அவருக்கு பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நடந்த மகாபஞ்சாயத்தில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வெறுமனே கூட்டத்தை கூட்டுவது மட்டும் சட்டங்களை திரும்பப்பெற வழிவகுக்காது என மந்திரி கூறுகிறார். ஆனால் கூட்டங்கள் கூடியபோது அரசுகளே மாறியிருக்கின்றன. இதை அவர்கள் மறந்து விட்டார்கள். விவசாயிகள் தங்கள் சொந்த விளைச்சலையே அழிக்க முடியுமா? என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அவற்றுக்கு முன் நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல.

ஏராளமான கேள்விகள்
வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஏராளமான கேள்விகள் உள்ளன. வெறும் வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல, மின்சார திருத்த மசோதா, விதை மசோதா என அனைத்தை பற்றியும் கேள்விகள் உள்ளன. என்ன மாதிரியான சட்டங்களை அவர்கள் கொண்டு வர விரும்புகின்றனர்?

இந்த போராட்டம் விவசாயிகளுடையது மட்டுமல்ல, ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பிற துறையினருக்குமானது. இந்த சட்டங்கள் ஏழைகளை அழித்து விடும். இந்த ஒரு சட்டம் மட்டுமல்ல, இதைப்போல ஏராளமான சட்டங்கள் வரும்.

எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். விவசாயிகளால் வயல்வெளிகளிலும், போராட்டக்களத்திலும் ஒரே நேரத்தில் பங்களிப்பு செய்ய முடியும். அது மட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை தியாகம் செய்யவும் விவசாயிகளால் முடியும்.

இவ்வாறு ராகேஷ் திகாயத் கூறினார்.

Next Story