திக்ரி எல்லையை காலி செய்யுமாறு போலீஸ் சுவரொட்டி: டெல்லியில் போராடும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு


திக்ரி எல்லையை காலி செய்யுமாறு போலீஸ் சுவரொட்டி: டெல்லியில் போராடும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 7:08 PM GMT (Updated: 23 Feb 2021 7:08 PM GMT)

டெல்லி திக்ரி எல்லையை காலி செய்யுமாறு போலீசார் ஒட்டியுள்ள எச்சரிக்கை சுவரொட்டிகளுக்கு, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போலீஸ் சுவரொட்டிகள்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை, தங்களை அவை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் செல்ல வைத்து விடும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ஒழிக்கப்பட்டு விடும் என்பது விவசாயிகளின் கருத்து. எனவே டெல்லியில் சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளை வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டம், 90 நாட்களை எட்ட உள்ளது. இந்த நிலையில் திக்ரி எல்லையில், போராடும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போலீஸ் தரப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாய கூட்டமைப்பு எதிர்ப்பு

இதையொட்டி, விவசாயிகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

போராடும் விவசாயிகள், போராட்ட களத்தை காலி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் திக்ரி எல்லையில் போலீசார் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். தங்களது அரசியல் சாசன உரிமைகளை பயன்படுத்தி, அமைதியான முறையில் விவசாயிகள் போராடி வருவதால் இது போன்ற சுவரொட்டிகள் பொருத்தம் இல்லாதவை. இத்தகைய மிரட்டல்கள் மற்றும் எச்சரிக்கைகள் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெறும் சதியை நாங்கள் எதிர்ப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் தரப்பு கருத்து
இது தொடர்பாக டெல்லியில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “போராட்டம் தொடங்கிய நிலையில் எல்லையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவர்கள் அரியானா பகுதிக்குள் அமர்ந்துள்ளதை சுவரொட்டிகள் மூலம் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை என்றுதான் தெரிவித்துள்ளோம்” என குறிப்பிட்டார்.

Next Story