தேசிய செய்திகள்

சிக்பள்ளாப்பூர் குவாரியில் பயங்கர வெடிவிபத்து; 6 பேர் உடல் சிதறி சாவு; சி.ஐ.டி. விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு + "||" + Quarry blast at Chikkaballapur; Body scattering death of 6 people; Karnataka Government inquiry

சிக்பள்ளாப்பூர் குவாரியில் பயங்கர வெடிவிபத்து; 6 பேர் உடல் சிதறி சாவு; சி.ஐ.டி. விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு

சிக்பள்ளாப்பூர் குவாரியில் பயங்கர வெடிவிபத்து; 6 பேர் உடல் சிதறி சாவு; சி.ஐ.டி. விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு
சிக்பள்ளாப்பூர் அருேக கல்குவாரியில் வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் அப்பலகெரே அருகே ஹுனசோடு கிராமத்தில் கல்குவாரிக்கு லாரியில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

சிவமொக்கா துயரம்
அப்போது வெடிப்பொருட்கள் உராய்ந்து தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த லாரியில் பயணம் செய்த 6 பேர் உடல் சிதறி பலியானார்கள். அவர்களது உடல் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து மாநிலம் முழுவதும் சட்டவிரோத கல்குவாரிகளை மூடவும், சட்டவிரோதமாக வெடிப்பொருட்கள் சப்ளை செய்வதை தடுக்கவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது. அதன்படி பல இடங்களில் செயல்பட்ட சட்டவிரோத கல்குவாரிகள் மூடப்பட்டன. மேலும் குடோன்களில் பதுக்கிய வெடிப்பொருட்களையும், சட்டவிரோத வெடிப்பொருட்கள் விற்பனையையும் தடுக்கும் பணியில் போலீசாரும், கனிமவளத் துறையினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீண்டும் வெடி விபத்து
சிவமொக்கா வெடிவிபத்து சுவடு மறைவதற்குள் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வெடிப்பொருட்கள் வெடித்து 6 பேர் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா ஹிரேநாகவள்ளி கிராமம் அருகே உள்ளது வராலகொண்டே குன்று. இங்கு கடந்த 7 ஆண்டுகளாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 5 ெதாழிலாளர்கள் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். உடன், கல் குவாரியில் கணக்காளராக பணியாற்றும் அபி (வயது 27) மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதிகாலை 12.45 மணிக்கு சரக்குவாகனத்தில் கொண்டு சென்ற ஜெலட்டின் குச்சிகள் திடீரென வெடித்துச் சிதறியுள்ளன.

6 பேர் உடல் சிதறி பலி
இந்த கோர சம்பவத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற 5 தொழிலாளர்களும், மோட்டார் சைக்கிளில் சென்ற அபியும் என மொத்தம் 6 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் சிலர் காயமடைந்தனர். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நேற்று காலை சிக்பள்ளாப்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரி கே.சுதாகர், கலெக்டர் லதா, போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடல் பாகங்கள் சேகரிப்பு
மேலும் சம்பவ இடத்திற்கு வெடிபொருள் நிபுணர்கள், ேபரேசந்திரா போலீசார் விரைந்து சென்றனர். வெடி விபத்தில் பலியான 6 பேரின் உடல்களும் சிதறி கிடந்தன. மேலும் வாகனம், மோட்டார் சைக்கிளும் எரிந்து எலும்புக் கூடாக உருக்குலைந்து கிடந்தன. வெடி விபத்து நடந்த இடத்தில் கிடந்த வெடி பொருள் சிதறல்களை வெடிப்பொருள் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.மேலும் பலியானவர்களின் உடல்கள் துண்டு, துண்டாகி கிடந்ததால், உடல் பாகங்களை சேகரித்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்கள் அடையாளம்
போலீஸ் விசாரணையில் பலியானவர்கள் அடையாளம் தெரியவந்தது. பலியானவர்களில் ஹிரேநாகவள்ளியை சேர்ந்த ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 3 பேர், நேபாளத்தை சேர்ந்த ஒருவர், பாகேபள்ளியை சேர்ந்த ஒருவர் என்றும், அவர்களது பெயர்கள் ராமு, மகேஷ், முரளி, கங்காதர், உமாகாந்த், அபி என்பதும், இவர்கள் அனைவரும் பிம்மரவாசினி என்ற கல்குவாரியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இந்த கல்குவாரி நாகராஜ ரெட்டி என்பவருக்கு சொந்தமானதாகும். இதைதொடர்ந்து ெவடி விபத்து ெதாடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி இரங்கல்
இந்த வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சிக்பள்ளாப்பூர் வெடி விபத்தில் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இருந்தாலும், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், சிக்பள்ளாப்பூர் வெடிவிபத்து துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றார்.

பேட்டி
இந்த நிலையில் வெடிவிபத்து நடந்த இடத்தை உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று மதியம் பார்வையிட்டார். பின்னர் சம்பவம் பற்றி கலெக்டர் லதா, போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார். பின்னர் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

அமோனியம் நைட்ரேட்
சிக்பள்ளாப்பூரில் நடந்த வெடி விபத்து சம்பவத்தில் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள். பெரிய அளவில் வெடி விபத்து சம்பவம் நடந்திருப்பதை நேரில் பார்த்த பின்பு அறிந்து கொண்டேன். ஏனெனில் பலியானவர்கள் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதனை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது.ஒரு மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோ முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. ஜெலட்டின் குச்சிகள், அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிப்பொருட்கள் வெடித்திருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

3 பேர் பங்குதாரர்கள்
தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெட்ரோலியம் ஜெல் மற்றும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களே இதுவாகும். இந்த கல்குவாரி ஸ்ரீசிரடி சாய் ஏஜென்சி பெயரில் நடத்தப்பட்டு வந்துள்ளது. 3 ஏக்கரில் கல்குவாரியும், 3 ஏக்கரில் கிரசரும் செயல்பட்டு வந்துள்ளது. கிரசர் நடத்துவதற்கு 2030-ம் ஆண்டு வரை உரிமையாளர் உரிமம் பெற்றுள்ளார்.

ஆனால் கல்குவாரி நடத்துவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியின் பங்குதாரர்களாக 3 பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நாகராஜ் கர்நாடகத்தை சேர்ந்தவர் ஆவார். மற்ற 2 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

7-ந் தேதியே சோதனை
இந்த கல்குவாரியில் கடந்த 7-ந் தேதி தான் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. வெடிப்பொருட்கள் எதுவும் சிக்காமல் இருந்தது. சோதனைக்கு பின்பு கல்குவாரியில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும், அந்த வெடிப்பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்ற போது வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளது. சிவமொக்காவிலும் இதுபோல், வெடிப்பொருட்கள் ஏற்றிச் சென்றிருந்த வாகனம் வெடித்து சிதறி இருந்ததில் 6 பேர் பலியாகி இருந்தார்கள்.

ஆந்திர மாவட்டம் அனந்தபூரை சேர்ந்தவர் அந்த வெடிப்பொருட்களை சப்ளை செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த சம்பவத்தில் தவறு செய்த ஐதராபாத், ஆந்திரா, மும்பையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபோன்று, சிக்பள்ளாப்பூர் வெடிவிபத்து சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக 
இருந்தாலும் சரி, அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தலா ரூ.5 லட்சம்
குறிப்பாக இந்த வெடிப்பொருட்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார், சட்டவிரோதமாக வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா உள்ளிட்டவை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வெடி விபத்து சம்பவம் குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பித்து விட முடியாது.

வெடி விபத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் கண்டறியப்படுவதுடன், வெடிப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீதும் எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடு்க்கப்படுவது உறுதி. மக்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.