மராட்டியத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று; ஒரே நாளில் கொரோனாவுக்கு 51 பேர் பலி + "||" + Corona Infection in the Maharastra again exceeds 6 thousand; In one day, 51 people were killed in the corona
மராட்டியத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று; ஒரே நாளில் கொரோனாவுக்கு 51 பேர் பலி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஒரே நாளில் 51 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிய வகை வைரசும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவுரங்காபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி இருந்தது.
மீண்டும் அதிகரிப்பு
இந்தநிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் பாதிப்பு 5 ஆயிரத்து 210 ஆக குறைந்தது. இந்தநிலையில் மாநிலத்தில் மீண்டும் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதன்படி நேற்று புதிதாக 6 ஆயிரத்து 218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அகோலா மண்டலத்தில் மட்டும் 1,392 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகோலா மண்டலத்தில் அமராவதி, யவத்மால், புல்தானா, வாசிம், அகோலா மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
51 பேர் பலி
மாநிலத்தில் இதுவரை 21 லட்சத்து 12 ஆயிரத்து 312 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 20 லட்சத்து 5 ஆயிரத்து 851 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 53 ஆயிரத்து 409 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல கொரோனாவுக்கு ஒரே நாளில் 51 பலியானார்கள். சமீப நாட்களில் இது அதிகப்பட்ச பாதிப்பு ஆகும். நேற்று முன்தினம் 18 பேர் மட்டும் உயிரிழந்து இருந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 857 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பையில் குறைந்தது
தலைநகர் மும்பையை பொறுத்தவரை பாதிப்பு குறைந்து உள்ளது. நகரில் மேலும் 643 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நகரில் இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 8 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 454 ஆக உயர்ந்து உள்ளது.
இரவு ஊரடங்கு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே சில மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தற்போது அவுரங்காபாத் மாவட்டத்திலும் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி வரை பிறப்பிக்ப்பட்டு இருக்கிறது.
புதிய வகை கொரோனா
இந்தியாவில் மராட்டியம், கேரளா ஆகிய 2 மாநிலங்கள் கொரோனாவின் பிடியில் இன்னும் மீள முடியாமல் தத்தளிக்கும் நிலையில் இங்கு என்440கே, இ484கே ஆகிய 2 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ்களே காரணம் என நம்புவதற்கில்லை என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.
இதையொட்டி மத்திய அரசு சார்பில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் நேற்று கூறியதாவது:-
புதிய வகை கொரோனா வைரஸ்களான என்440கே, இ484கே ஆகிய இரண்டும் மராட்டியத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதே போன்று கேரளாவிலும், தெலுங்கானாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா பாதிப்பும் இந்தியாவில் உள்ளது. அதே நேரத்தில் மாட்டியம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும், சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதற்கு இந்த புதிய வைரஸ்கள் தான் காரணம் என்று விஞ்ஞானபூர்வமாக நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை.
மரபணு வரிசைப்படுத்தல்
வைரஸ் பிறழ்வுகள் தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3,500 திரிபுகள் மரபணு வரிசைபடுத்தப்பட்டுள்ளன. இப்படி மரபணுக்களை வரிசைபடுத்துகிறபோது, நாங்கள் வைரசின் தன்மையில் ஏதாவது வழக்கத்துக்கு மாறான மாற்றம் இருக்கிறதா என்று பார்க்கிறோம். பிறழ்வுகளை கவனித்துக்கொண்டும் இருக்கிறோம்.