சிக்பள்ளாப்பூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தை சித்தராமையா பார்வையிட்டார்


சிக்பள்ளாப்பூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தை சித்தராமையா பார்வையிட்டார்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:07 PM GMT (Updated: 23 Feb 2021 10:07 PM GMT)

சிக்பள்ளாப்பூர் வெடிவிபத்து நடந்த சம்பவ இடத்தை சித்தராமையா நேரில் பார்வையிட்டார்.

பெங்களூரு, 

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகாவில் உள்ள ஹிரேநாகவள்ளி கிராமத்தில் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற வெடிப்பொருட்கள் வெடித்து 6 தொழிலாளர்கள் உயிர் இழந்திருந்தனர். வெடி விபத்து நடந்த பகுதியை நேற்று மாலையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பார்வையிட்டார்.

அப்போது சம்பவம் நடக்க காரணம் என்ன?, பலியானவர்கள் பற்றி தகவல்கள், எந்த மாதிரியான வெடிப்பொருட்கள் வெடித்திருந்தது உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் லதா, போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமாரிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.

அப்போது சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தெரிவித்தார். உடனே மற்றவர்களை எப்போது கைது செய்வீர்கள், சட்டவிரோத கல்குவாரி நடைபெறுவது பற்றி உங்களுக்கு தெரியாதா, சிவமொக்காவில் வெடி விபத்து நடந்த பின்பும் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காது ஏன் என்று மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சித்தராமையா கண்டித்தார். மேலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டார். 

Next Story