புதுச்சேரியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு


புதுச்சேரியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை:  கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
x
தினத்தந்தி 25 Feb 2021 1:00 AM GMT (Updated: 25 Feb 2021 1:00 AM GMT)

புதுச்சேரி கவர்னராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 18-ந்தேதி பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது அரசுத் துறைகளில் ஆய்வு நடத்தி வருகிறார்.

புதுச்சேரி, 

அந்தவகையில் சமீபத்தில் ரோடியர் மில் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.

இந்தநிலையில் தற்போது அவர்களுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்படுவதை 3 முட்டைகளாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரி மாநிலத்திலுள்ள 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. அக்குழந்தைகளின் புரதச் சத்தின் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வீதம் வழங்கப்படுவதை உயர்த்தி வாரம் 3 முட்டைகள் வீதம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசுத் துறைக்கு அறிவுறுத்தினார். அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் அளித்தார். இதனால் 29 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர். புதுச்சேரி அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1 கோடியே 68 லட்சம் கூடுதல் செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story