காங்கிரசுடன் புதிதாக கூட்டணி அமைக்கவில்லை; ஒப்பந்தபடியே மைசூரு மேயர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கிடைத்துள்ளது; தேவேகவுடா பேட்டி


காங்கிரசுடன் புதிதாக கூட்டணி அமைக்கவில்லை; ஒப்பந்தபடியே மைசூரு மேயர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கிடைத்துள்ளது; தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2021 5:25 AM GMT (Updated: 25 Feb 2021 5:25 AM GMT)

காங்கிரசுடன் புதிதாக கூட்டணி அமைக்கவில்லை என்றும், ஒப்பந்தபடியே மைசூரு மேயர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கிடைத்துள்ளது என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

துமகூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கூட்டணி புதிது அல்ல
மைசூரு மாநகராட்சி மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது புதிது அல்ல. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தபடியே மேயர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கிடைத்துள்ளது. மைசூரு மாநகராட்சி தோ்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தது. ஜனதாதளம் (எஸ்) கட்சியின் பலம் 26 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலம் 18 தான்.

இதனால் கூட்டணி அமைத்து மைசூரு மாநகராட்சியை கைப்பற்றினோம். சித்தராமையா விரும்பியதால் முதல் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி விட்டு கொடுக்கப்பட்டது. தற்போது ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர் மேயராகி உள்ளார். இதில் எந்த குழப்பமும் இல்லை. சில கருத்து வேறுபாடுகளால் ஜனதாதளம் (எஸ்) கட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கு வேட்பாளர்களை நிறுத்தியது. இறுதி கட்டத்தில் மேயர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் வழங்கியது.

பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை...
மேயர் தேர்தல் நடைபெறுவதையொட்டி முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மைசூருவிலேயே தங்கி இருந்தார். எந்த ஒரு காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களும் குமாரசாமியை சந்திக்கவில்லை. அரசியல் காரணங்கள், பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி தொடர வேண்டிய நிலை வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story