புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ


புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 25 Feb 2021 6:09 AM GMT (Updated: 25 Feb 2021 6:09 AM GMT)

புதுவையில் ஜனாதிபதி ஆட்சிவர நாராயணசாமிதான் காரணம் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

நலத்திட்ட உதவிகள்
உப்பளம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கிழக்கு மாநில செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் எம்.எல்.ஏ., தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் ஏழை, ஆதரவற்ற பெண்களுக்கு தையல் எந்திரம், மின்சார அடுப்பு, புடவை, இலவச தட்டுவண்டிகள் வழங்கப்பட்டது. பெத்தாங் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

அப்போது அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மக்களுக்கு எதிராக...
புதுவையில் தி.மு.க. துணையோடு நடந்த காங்கிரஸ் அரசு அடித்து நொறுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் எண்ணத்துக்கு எதிராக செயல்பட்டால் இப்படிப்பட்ட சூழ்நிலைதான் உருவாகும். அதை புரிந்துகொள்ளாமல் ஆட்சியை கலைத்துவிட்டதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிவருகிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும், தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரும் இந்த அரசை கண்டித்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதை உணர்ந்து நாராயணசாமி பேசவேண்டும். நம்மை பொறுத்தவரை குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை.

சாயம் வெளுத்தது
புதுவையில் ஜனாதிபதி ஆட்சிவர நாராயணசாமிதான் காரணம். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிப்பார்கள். ஆனால் நாராயணசாமி மாற்றுக்கட்சியில் செல்வாக்குள்ள நபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு முறையும் வாய்ப்பளித்தார்.

அவரது தந்திரதன்மை கொஞ்சநாள் பலித்தது. ஆனால் இம்முறை அவரது சாயம் வெளுத்துவிட்டது. புதுவை மாநிலம் காங்கிரஸ் கோட்டை என்பது தூள்தூளாக நொறுக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

நிர்வாகிகள்
நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, இணை செயலாளர்கள் பன்னீர்செல்வி, கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி உமாகாந்தி, சேரன், மூர்த்தி, அய்யப்பன், மணவாளன், பி.எல்.கணேசன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாணவர் அணி செயலாளர் பிரதீப், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிராங்கிளின், விவசாய அணி 
செயலாளர் குணசக்கரவர்த்தி, மீனவர் அணி செயலாளர் ஞானவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ராஜ்பவன்
ராஜ்பவன் தொகுதியில் 730 ஏழைகளுக்கு வேட்டி-சேலை வழங்கப்பட்டது. மேலும் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்சியில் கிழக்கு மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், முன்னாள் தொகுதி செயலாளர் அன்பழக உடையார், துணை செயலாளர் உமாமோகன், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், ராஜ்பவன் தொகுதி செயலாளர் சிவக்குமார், அவைத்தலைவர் சுரே‌‌ஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்முருகன், இணை செயலாளர் சாவித்திரி, அய்யப்பன், பொருளாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story