மோட்டார் சைக்கிள்-டிப்பர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு


மோட்டார் சைக்கிள்-டிப்பர் லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு
x
தினத்தந்தி 25 Feb 2021 9:34 PM GMT (Updated: 25 Feb 2021 9:34 PM GMT)

ஹாவேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்தனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த சோகம் நிகழ்ந்து உள்ளது.

ஹாவேரி:

ஹாவேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்தனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த சோகம் நிகழ்ந்து உள்ளது.

ஒரே மோட்டார் சைக்கிளில்...

  ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா முடானூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது 40). இவருக்கு திருமணம் முடிந்து அனசுயம்மா (32) என்ற மனைவியும், வனிதா (11), சுனிதா (9) என 2 மகள்களும் இருந்தனர். இந்த நிலையில் ராணிபென்னூர் அருகே உள்ள துர்காதேவி கோவிலில் நேற்று திருவிழா நடந்தது.

  இதில் கலந்து கொள்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சித்தப்பா, அனுசுயாம்மா, சுனிதா, வனிதா ஆகியோர் சென்று இருந்தனர். திருவிழா முடிந்ததும் நேற்று மதியம் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

4 பேர் பலி

  முடானூர் அருகே வந்த போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.

  இதுபற்றி அறிந்த முடானூர் கிராம மக்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அங்கு விரைந்து சென்றனர். மேலும் இறந்து கிடந்த 4 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

லாரி டிரைவருக்கு வலைவீச்சு

  மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஹாவேரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் மற்றும் ராணிபென்னூர் புறநகர் போலீசார் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் பார்வையிட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

  இந்த சம்பவம் குறித்து ராணிபென்னூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story