கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரிகள் இன்று வேலை நிறுத்தம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Feb 2021 12:14 AM GMT (Updated: 26 Feb 2021 12:14 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகத்தில் இன்று லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

பெங்களூரு, 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில லாரிகள் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சண்முகப்பா, “மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள், கட்டுப்பாடுகள் காரணமாக லாரி உரிமையாளர்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் வாகனங்களுக்கான உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்து விட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டீசல் விலையை உயர்வை கண்டித்து கர்நாடகத்தில் நாளை (அதாவது இன்று) லாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்ததம் நடைபெற உள்ளது. லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. பின்னர் மார்ச் 15-ந் தேதி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தில் டீசல் விலை அதிகமாக உள்ளதால், மற்ற மாநிலங்களுக்கு சென்று லாரிகளில் டீசல் நிரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடகத்திற்கு ரூ.1.60 கோடி இழப்பு ஏற்படுகிறது. மாநிலத்தில் பல்வேறு சுங்க சாவடிகளின் கால அவகாசம் முடிந்து விட்ட பின்பும், அங்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைவாக இருக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் மட்டும் பெட்ரோல், டீசலுக்கான வரி அதிகமாக இருக்கிறது.

இதனால் கர்நாடக அரசு டீசல் விலையில் ரூ.4 குறைக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டர் தூரம் லாரியை ஓட்டிச் செல்ல ரூ.26 செலவாகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் லாரியை இயக்க எப்படி முடியும். நாளை (இன்று) லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறவதால், கர்நாடகத்தில் 6 லட்சம் லாரிகள் ஓடாது. டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் மனு அளிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story