புதுவையிலும் 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்தாகுமா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்


புதுவையிலும் 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்தாகுமா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2021 12:23 AM GMT (Updated: 26 Feb 2021 12:23 AM GMT)

புதுவையிலும் 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி,

புதுவையில் பள்ளிக்கல்வியை பொறுத்தவரை தமிழக கல்வி வாரியத்தின் பாடத்திட்டமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பாடப்புத்தகங்களே கொள்முதல் செய்யப்பட்டு புதுவையில் பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் அரசு பொதுத்தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களும் தமிழக கல்வி வாரியம் தயாரித்து புதுவைக்கு வழங்குகிறது. விடைத்தாள்களும் தமிழக ஆசிரியர்களால் திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கொரோனா காரணமாக 9, 10, 11-ம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்தப்படாமலேயே அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு காரணமாக புதுவை அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் தமிழக கல்வி வாரியம் தயாரிக்கும் கேள்வித்தாள்கள்தான் புதுவையிலும் வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே புதுவையிலும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

புதுவை, காரைக்காலில் தமிழக கல்வி வாரிய பாடத்திட்டம் தான் கடைபிடிக்கப்படுகிறது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள்கள் தமிழக அரசிடமிருந்தே பெறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 9, 10, 11 வகுப்புகளுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கான சுற்றறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது? என்று தெரியவில்லை. அதை பார்த்த பின்னர் அதற்கு தகுந்தாற்போல் புதுவை அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story