சீனாவுடன் வர்த்தக உறவு; மத்திய அரசு மீது சிவசேனா சாடல்


சீனாவுடன் வர்த்தக உறவு; மத்திய அரசு மீது சிவசேனா சாடல்
x
தினத்தந்தி 26 Feb 2021 2:46 AM GMT (Updated: 26 Feb 2021 2:46 AM GMT)

சீனாவுடன் வர்த்தக உறவு குறித்து மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

எல்லையில் பதற்றம்
லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல் காரணமாக கடந்த சில மாதங்களாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லையில் படையை திரும்ப பெற சீனா முடிவு செய்தது. இந்தநிலையில் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி 2020-ம் ஆண்டில் சீனா, இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக கூட்டாளியாக விளங்குவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான “சாம்னா”வில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சீன நிறுவனங்களுக்கு அனுமதி
இந்தியா- சீனா எல்லையில் நிலவிய பதற்றம் கடந்த வாரம் குறைந்தது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளில் உள்ள பதற்றமும் குறையும் என்று தெரிகிறது. சுமார் 45 சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.சுருக்கமாக சொன்னால், கொரோனா வெடிப்புக்கு பின்னர் சீன நிறுவனங்கள் விஷயத்தில் பிரதமர் மோடி அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு காரணமாக இந்தியாவில் அதன் முதலீடுகள் அதிகரிக்கப்படுகின்றன.

நம்ப முடியாத நாடு
மற்ற நாடுகளுடனான நமது அரசியல் மற்றும் ராஜதந்திர உறவுகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன.ஆனால் எல்லையில் பதற்றம் அதிகரித்த பின்னர் சீன வர்த்தகம் குறித்த தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொண்டு இருப்பது தற்செயலான நிகழ்வா?கடந்த 8 மாதங்களாக எல்லையில் நீடித்து வந்த பதற்றமான சூழ்நிலைக்கு பின்னர் சீனா தனது படையை எல்லையில் இருந்து நீக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன்பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு அதிகரித்துள்ளது.

சீனா நம்பமுடியாத மற்றும் நம்ப தகுதியற்ற அண்டை நாடு. அது தனது வர்த்தகத்திற்காக எல்லையில் மென்மையான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், தங்கள் நோக்கம் நிறைவேறியவுடன் மீண்டும் எல்லை பிரச்சினையில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.தற்போது மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்மூலம் சீனா பொருட்கள், ‘ஆப்’களுக்கு விதிக்கப்பட்ட தடை, சுதேசி இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தது போன்ற தேசியவாத காற்றால் ஊதி நிரப்பப்பட்ட பெரிய பலூன் உடைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story