தேசிய செய்திகள்

கடன் சுமையால் கோவை கடற்படை அதிகாரி கடத்தல் நாடகமாடி தற்கொலை? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் + "||" + Coimbatore naval officer kidnapped in theater due to debt burden? Sensational information in the police investigation

கடன் சுமையால் கோவை கடற்படை அதிகாரி கடத்தல் நாடகமாடி தற்கொலை? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

கடன் சுமையால் கோவை கடற்படை அதிகாரி கடத்தல் நாடகமாடி தற்கொலை? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
கடன் சுமையால் கோவை கடற்படை அதிகாரி கடத்தல் நாடகமாடி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீக்காயங்களுடன் கடற்படை அதிகாரி
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் சுரஜ்குமார் துபே(வயது27). இவர் கோவையில் கடற்படை அதிகாரியாக இருந்தார். கடந்த 5-ந் தேதி பால்கர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீக்காயங்களுடன் போலீசாரால் மீட்கப்பட்டார். இதில் அவர் சென்னை விமான நிலையம் அருகில் இருந்து கும்பலால் காரில் பால்கருக்கு கடத்தி வரப்பட்டதாக தெரிவித்தார்.மேலும் கடத்தல் கும்பலுக்கு ரூ.10 லட்சம் கொடுக்காததால் தன்னை தீ வைத்து எரித்துவிட்டதாக கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தற்கொலை?
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடற்படை அதிகாரி அளித்த தகவல்கள் பல முன்னுக்கு பின் முரணாக இருப்பது தெரியவந்தது. அதிக கடன் சுமையில் இருந்த கடற்படை அதிகாரி கடத்தல் நாடகமாடி தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இதுகுறித்து பால்கர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தத்தாரே ஷிண்டே கூறும்போது:-
துபே சென்னையில் ஜனவரி 30-ந் தேதி கடத்தப்பட்டதாக கூறினார். ஆனால் அதன்பிறகும் அவர் அங்கு தான் இருந்து இருக்கிறார். அங்கு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து உள்ளார். மேலும் சென்னையில் இருந்து வேலூருக்கு சென்று ஒரு தங்கும் விடுதியில் இருந்து உள்ளார். பிப்ரவரி 1-ந் தேதி அறையை காலி செய்து உள்ளார். ஆனால் அவர் சென்னை விமான நிலையம் அருகே கடத்தப்பட்டதாக கூறியிருந்தார்.சென்னையில் இருந்து பால்கருக்கு காரில் வர 26 மணி நேரங்கள் ஆகும். எனவே அவர் எப்படி சில மணி நேரங்களில் சென்னையில் இருந்து பால்கா் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

டீசல் வாங்கினார்
இதேபோல அவர் பிப்ரவரி 5-ந் தேதி அதிகாலை 5 மணியளவில் தலசேரில் உள்ள பெட்ரோல் பங்கில் 5 லிட்டர் டீசலை கேனில் வாங்கி சென்று இருக்கிறார். அதற்கான கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளது. மேலும் கடத்தல்காரர் இர்பான் என்ற பெயரில் இவரே குடும்பத்தினரிடம் பேசி பணம் கேட்டு இருக்கிறார். கடற்படை அதிகாரிக்கு ரூ.25 லட்சத்திற்கு மேல் கடன் இருந்து உள்ளது. அவர் கடன் கேட்டு 13 வங்கிகளை அணுகி உள்ளார்.

பங்குசந்தையில் அவர் ரூ.18 லட்சத்தை இழந்து இருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அவர் கடத்தல் நாடகமாடி தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் இறுதி முடிவுக்கு நாங்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.