கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மார்ச் 31 வரை நீட்டித்து அரசு உத்தரவு


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மார்ச் 31 வரை நீட்டித்து அரசு உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2021 11:30 AM GMT (Updated: 26 Feb 2021 11:30 AM GMT)

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற மார்ச் 31ந்தேதி வரை நீட்டித்து மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீபகாலங்களாக குறைந்து வந்தது.  ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் தற்போது வரை 1,34,72,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.  இதுபற்றி மத்திய உள்விவகார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளை கண்டறிதல், கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற மார்ச் 31ந்தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளபோதிலும், கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்து உள்ளது.

நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மக்கள் தொகையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் வகையில் கொரோனா தடுப்பூசிகளை போடும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Next Story