மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் ; பிரதமர் மோடி - அமித் ஷா ஆலோசனையில் செய்யப்பட்டதா? மம்தா பானர்ஜி கேள்வி


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 26 Feb 2021 2:22 PM GMT (Updated: 26 Feb 2021 2:22 PM GMT)

அசாம் மூன்று கட்டங்களாகவும் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியும் என்றால், மேற்கு வங்காள தேர்தலை ஏன் எட்டு கட்டங்களாக பிரிக்கப்படுகின்றன என்று மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

கொல்கத்தா

மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்  8 கட்டங்களாக  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்து வருகிறது. 

பாஜக சார்பில் பல்வேறு மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் மேற்குவங்க மாநிலத்திற்கு தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:-

அசாம் தேர்தலை மூன்று கட்டங்களாகவும், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியும் என்றால், மேற்கு வங்காள தேர்தலை  ஏன் எட்டு கட்டங்களாக பிரிக்கப்படுகின்றன என்று கேட்டார்.

பாஜகவின் வசதிக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் ஆலோசனையுடன் இது செய்யப்பட்டுள்ளதா? அவர்களின் பிரச்சாரத்தை எளிதாக்குவதற்காக இது செய்யப்பட்டுள்ளதா? ஆனால்  இது பாஜகவுக்கு உதவாது. நாங்கள் அவற்றை முறியடிப்போம் என கூறினார்.

ஒரே மாவட்டங்களில் வெவ்வேறு கட்டங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு மம்தா பானர்ஜி  எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் அவர்கள் பகுதி 1 பகுதி 2 இல் மாவட்டங்களை பிரித்துள்ளனர். நாங்கள் தெற்கு 24 பர்கானாவில் சக்திவாய்ந்தவர்கள் என்பதால் இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பா.ஜ.க மக்களை மதத்தால்  பிளவுபடுத்த முயற்சிக்கிறது.மாநில தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக மத்தியில்  ஆளும் கட்சியான பாஜக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.

அவர்களின் எல்லா விளையாட்டுகளும் எங்களுக்குத் தெரியும். மத்திய அரசு தனது அதிகாரத்தை மாநிலத் தேர்தலில் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

நாங்கள் சாதாரண மக்கள். எனினும் தொடர்ச்சியாக போராடுவோம். தேர்தலில் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். தேர்தலையொட்டி பாஜக தங்களது நிறுவனங்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்து வருகிறது.

வங்காள பெண்கள்  மாநிலத்தை அவமதித்த பாஜகவுக்கு தகுந்த  பதில் அளிப்பார்கள் என கூறினார்.

Next Story