தமிழக சட்டசபை தேர்தல் கட்டுப்பாடுகள்: தலைமை தேர்தல் ஆணையர் அரோரா அறிவிப்பு


தமிழக சட்டசபை தேர்தல் கட்டுப்பாடுகள்:  தலைமை தேர்தல் ஆணையர் அரோரா அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2021 3:41 PM GMT (Updated: 26 Feb 2021 3:41 PM GMT)

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதுடன் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,
 
தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி தொடர்புடைய அறிவிப்புகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று வெளியிட்டார்.  இதில், தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட தேர்தல் நடைபெறும்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கான தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  இதன்படி, ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையாளர் சத்யபிரத சாகு தெரிவித்து உள்ளார்.

தேர்தலை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சில கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  இதன்படி, வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.  வேட்பாளர் அல்லது வாக்காளராக இருந்தால் வாக்குச்சாவடிக்கு அமைச்சர்கள் செல்லலாம்.

சாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பரப்புரை செய்யக்கூடாது.  வழிபாட்டு தலங்களில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது.  மாற்று கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள், ஆட்சியை விமர்சிக்கலாம்.  மாற்று கட்சியின் தனி நபர்களின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  தேர்தல் முடியும் வரை ஆளும் அரசு, புதிய நல திட்டங்களை அறிவிக்க கூடாது.  அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய கூடாது.  பதவி உயர்வும் வழங்கக்கூடாது.

அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட கூடாது.  அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்த கூடாது.  பொது மைதானங்களை ஹெலிபேடாக அனுமதி வழங்குவதில் கட்சி பேதம் பார்க்க கூடாது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.

பிற கட்சிகளின் பரப்புரை கூட்டங்களில் குழப்பம் விளைவிக்க கூடாது.  அனுமதி பெறாமல் தனியார் இடங்களை பரப்புரைக்கு பயன்படுத்த கூடாது.  பிரசார விளம்பரங்களை வெளியிடுவதற்கு, 3 நாட்களுக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

Next Story