கொரோனா தடுப்பூசி போட்ட ஆஸ்பத்திரி ஊழியர் திடீர் சாவு


கொரோனா தடுப்பூசி போட்ட ஆஸ்பத்திரி ஊழியர் திடீர் சாவு
x
தினத்தந்தி 26 Feb 2021 10:02 PM GMT (Updated: 26 Feb 2021 10:02 PM GMT)

ஹாசனில் கொரோனா தடுப்பூசி போட்ட ஆஸ்பத்திரி ஊழியர் திடீரென உயிரிழந்தார். இதற்கு தடுப்பூசி தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹாசன்:

ஹாசனில் கொரோனா தடுப்பூசி போட்ட ஆஸ்பத்திரி ஊழியர் திடீரென உயிரிழந்தார். இதற்கு தடுப்பூசி தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆஸ்பத்திரி ஊழியர் திடீர் சாவு

  ஹாசன் மாவட்டம, பேளூர் தாலுகா நெட்டிகெரே கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் ஹாசனில் இயங்கிவரும் சி.எஸ்.ஐ. மிஷன் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கொரோனா பாதிப்போ அல்லது வேறு எந்த நோய் பாதிப்போ இல்லாமல் இருந்து சுரேசுக்கு, கடந்த 20 நாட்களுக்கு முன் சி.எஸ்.ஐ. மிஷன் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று சுரேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

  இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் சுரேஷ் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி சதீஷ், சி.எஸ்.ஐ. மிஷன் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

பிரேத பரிசோதனை அறிக்கை

  இறந்துபோன சுரேஷ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டதால் இறந்ததாக இதுவரை எந்த குற்றச்சாட்டும் வெளியாகவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுரேசின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர் எப்படி இறந்தார் என்ற உண்மை நிலவரம் தெரியவரும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த சம்பவம் ஹாசன் மட்டுமின்றி கர்நாடகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story