தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை


தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2021 1:24 AM GMT (Updated: 27 Feb 2021 1:24 AM GMT)

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மார்ச் 12-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

புதுடெல்லி, 

தமிழக சட்டசபையின் ஆயுள் மே மாதம் 24-ந் தேதி முடிகிறது.
 இதே போன்று புதுச்சேரி சட்டசபையின் ஆயுள், ஜூன் 8-ந் தேதியும், கேரள சட்டசபையின் ஆயுள் ஜூன் 1-ந் தேதியும் முடிகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் அண்டை மாநிலங்களாக அமைந்துள்ள நிலையில், அவற்றுக்கு ஒரே கட்டமாக, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதுபோல சட்டசபை பதவிக்காலம் முடியும் அசாம் மாநிலத்தில் 3 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டசபை தேர்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. பீகாரை தொடர்ந்து கொரோனா காலத்தில் நடத்தப்படுகிற மிகப்பெரிய தேர்தல் இதுதான் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சட்டசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று மாலை டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார்.

அதன்படி 234 இடங்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது.

இதே நாளில்தான் 30 இடங்களை கொண்டுள்ள புதுச்சேரி, 140 இடங்களை கொண்டுள்ள கேரளா ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கும்கூட ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் மார்ச் 12-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ந் தேதி முடிகிறது.

வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20-ந் தேதி அன்று நடக்கிறது.

வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கு கடைசி நாள் மார்ச் 22-ந்தேதி ஆகும்.

ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

இந்த 3 மாநில தேர்தலுடன் அசாம், மேற்கு வங்காளம் ஆகிய வட மாநில தேர்தல்களும் நடத்தப்படுவதால், 5 மாநில தேர்தல்களும் நடத்தப்பட்டு விட்ட பின்னர் மே மாதம் 2-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அன்று இரவே இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

தேர்தல் நடைமுறைகள் மே மாதம் 4-ந் தேதி முடிவுக்கு வரும்,

1 மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிப்பு

தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா வெளியிட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:-

* தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிற அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் தேர்தல் நாளுக்கு முன்னதாக தடுப்பூசி போடப்படும்.

* தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில தேர்தலில் 404 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

* கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியதிருப்பதால் வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.

* வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* அரசியல் கட்சிகள் ரோடு ஷோ என்று அழைக்கப்படுகிற நகர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படும். ஆனால் 5 வாகனங்கள் மட்டுமே இவற்றில் இடம் பெற முடியும்.

* பதற்றமான பகுதிகளிலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். போதுமான மத்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பும் போடப்படும்.

இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் அறிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் முதல்முறையாக கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளது. அதற்காக ஆளும் அ.தி.மு.க.வுடன் அந்த கட்சி கை கோர்க்கிறது. எனவே இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அ.தி.மு.க. தொடர்ந்து 3-வது முறை ஆட்சியை பிடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சியை அமைக்க அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் முதல் முறையாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். சசிகலா விடுதலைக்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டி.டி.வி. தினகரன் உற்சாகமாக இருக்கிறார். அவரது கட்சியும் களத்தில் இறங்குகிறது.

தமிழகம் பல முனை போட்டியை சந்திக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கும் என்பது உறுதி.

கேரளா, புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இடதுசாரி முன்னணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. பா.ஜ.க.வும் முழு முனைப்புடன் களத்தில் இறங்குகிறது. தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாற்றம் நடைபெறும் மாநிலம் என்ற பெயர் அதற்கு உண்டு. அது இந்த தேர்தலில் நிரூபணமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

புதுச்சேரியில் சமீபத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது. அவரது தலைமையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா அல்லது எதிர்க்கட்சிகள் அணிக்கு ஆட்சி போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. புதிய சலுகைகளையோ, திட்டங்களையோ அறிவிக்க முடியாது. அதிகாரிகள் இடமாற்றத்துக்கும் தேர்தல் கமிஷனின் முன் அனுமதியை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story