தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய் - நாளை முதல் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Feb 2021 1:57 AM GMT (Updated: 28 Feb 2021 2:15 AM GMT)

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி, 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 16-ந் தேதி இந்த தடுப்பூசிகளை போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 24-ந் தேதியன்று, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், தடுப்பூசி திட்டத்தின் 2-வது கட்டத்தை மார்ச் 1-ந் தேதி (நாளை) தொடங்குவது எனவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட வியாதிகளுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியை அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக்கொள்ளவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

தடுப்பூசிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனும், தனியார் ஆஸ்பத்திரிகளுடனும் கலந்து ஆலோசித்து மத்திய சுகாதார அமைச்சகம் 3 அல்லது 4 நாளில் அறிவிக்கும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.

கட்டணம் ரூ.250

இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

இதுபற்றி அந்த வட்டாரங்கள் கூறும்போது, தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 கட்டணம் என்பது அதிகபட்ச தொகையாக இருக்கும். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.150, ரூ.100 சேவை கட்டணம். இது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிற வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிட்டன.

இதுபற்றி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

பதிவு செய்வது எப்படி?

தடுப்பூசியின் இந்த இரண்டாவது கட்ட திட்டம் பற்றி தடுப்பூசி நிர்வாகத்தின் அதிகாரம் பெற்ற குழு தலைவர் ஆர்.எஸ்.சர்மா கடந்த வெள்ளிக்கிழமையன்று கீழ்க்கண்ட முக்கிய தகவல்களை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

* தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பயனாளிகள் கோ-வின் 2.0 தளத்திலும், ஆரோக்கிய சேது போன்ற செயலிகள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இவற்றில் தடுப்பூசி போடும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் விவரமும், தடுப்பூசி போடப்படும் நாட்கள், நேரம், மையம் பற்றிய அட்டவணையும் இடம் பெற்றிருக்கும்.

* பயனாளி எங்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பதை தீர்மானித்து, அதற்கான நேரத்தை பதிவு செய்து கொள்ள முடியும்.

* தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்தும், தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலும்.

* தகுதிவாய்ந்த பயனாளிகள் கோ-வின் தளத்தில் 1-ந் தேதி முதல் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் அனைத்து பயனாளிகளும், எந்த முறையில் பதிவு செய்திருந்தாலும், ஆதார் அட்டை, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் குறிப்பிடப்பட்ட புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அல்லது புகைப்பட அடையாள அட்டை இல்லாதநிலையில்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 45-59 வயதானவர்கள் பதிவு பெற்ற மருத்துவர் வழங்கிய சான்றிதழையும் எடுத்துச்செல்ல வேண்டும். சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களை பொறுத்தமட்டில் அவர்கள் பணி சான்றிதழ் அல்லது அலுவலக ரீதியிலான அடையாள அட்டையை எடுத்து செல்லவேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story