தமிழில் பேச முடியாததற்காக மிகவும் வருந்துகிறேன்: அமித்ஷா பேச்சு


தமிழில் பேச முடியாததற்காக மிகவும் வருந்துகிறேன்:  அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2021 3:29 PM GMT (Updated: 28 Feb 2021 3:29 PM GMT)

தமிழில் பேச முடியாததற்காக மிகவும் வருந்துகிறேன் என விழுப்புரத்தில் பா.ஜ.க. பொது கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.

விழுப்புரம்,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது.  தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் இறங்கி உள்ளன.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் பா.ஜ.க. பொது கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்பொழுது, இந்தியாவின் பழமையான மற்றும் இனிமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் பேச முடியாததற்காக நான் மிகவும் வருத்தமடைகிறேன்.  

அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.  திருவள்ளுவரை பற்றி அறியவும், தமிழில் பேசவும் விருப்பம் என பிரதமரும் தெரிவித்துள்ளார்.  தமிழ் மண்ணில் பிறந்த பல மகான்கள், உலகளவில் பெருமையை சேர்த்தவர்கள்.

அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபுறம் மக்கள் நலனுக்காக சிந்தித்து கொண்டிருக்கிறது.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி மறுபுறம் ஊழல் நிறைந்து உள்ளது.  பிரித்து ஆளக்கூடிய அரசியலை பின்பற்றுகிறது.

சோனியாஜி, ராகுல் பாபாவை பிரதமராக ஆக்குவதற்கான வருத்தத்தில் உள்ளார்.  உதயநிதியை முதல் மந்திரியாக்குவதில் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.

காங்கிரஸ் கட்சி ரூ.12 லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்டது.  அந்நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்தது.  தமிழ்நாட்டில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி ஆகிய மூன்றும் உள்ளன.

2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் 2 தலைமுறைகள்.  3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் 3 தலைமுறைகள்.  4ஜி என்றால் காந்தி குடும்பத்தின் 4 தலைமுறைகள் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story