கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி


கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி
x
தினத்தந்தி 1 March 2021 7:31 AM IST (Updated: 1 March 2021 7:48 AM IST)
t-max-icont-min-icon

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதையடுத்து தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.  இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. 

இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ உள்ளிட்டவைகள் கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.





Next Story