இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசிகளை வாங்க 50 நாடுகள் காத்திருக்கிறது: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


சமய மாநாட்டை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
x
சமய மாநாட்டை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 1 March 2021 4:02 PM IST (Updated: 1 March 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வாங்க 50 நாடுகள் காத்திருப்பதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

தமிழிசை சவுந்தரராஜன்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதனையொட்டி இந்து சேவா சங்கம் சார்பில் நடந்த 84-வது சமய மாநாட்டை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சி பணி
ஆண்டுதோறும் நடக்கும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி திருவிழாவில் கலந்து கொள்வது, எனக்கு அன்னை தந்த வரமாகும். முன்பு கட்சி பணியில் இருக்கும்போது தவறாமல் வந்தேன். இப்போது, ஆட்சி பணியின்போதும் தவறாமல் வருகிறேன். இதற்கு அன்னையின் அருளாசியே காரணமாகும்.முன்பு நான் ஒரு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆக வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இன்று எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆட்சி பணியை அன்னை எனக்கு தந்துள்ளார்.

தமிழில் பதவி பிரமாணம்
தெலுங்கானாவில் நான் ஆங்கிலத்தில் பதவி பிரமாணம் செய்து கொண்டேன். தமிழில் பதவி பிரமாணம் செய்வதற்கு ஆசைப்பட்டேன். அதுவும் இப்போது நிறைவேறி விட்டது. புதுச்சேரியில் தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்டது பெருமை அளிக்கிறது.மக்கள் எல்லோரும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி வர உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். உலகம் முழுவதும் கொரோனா பிடியிலிருக்கும் போது இந்தியா விரைவிலேயே மீண்டு வந்துள்ளது.

50 நாடுகள்...
அமெரிக்கா, கனடாவில் மூலைக்கு மூலை மருத்துவ மனைகள் உள்ளன. இந்தியாவில் மூலைக்கு மூலை கோவில்கள் உள்ளன. சிவன் கோவிலில் வில்வ இலை, விஷ்ணு கோவிலில் துளசி இலைகளால் பூஜை செய்யப்பட்டு அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. இதனால் தான் வெளிநாடுகள் வியக்கும் வண்ணம் நாம் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளோம்.கொரோனாவை எதிர்க்கும் மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவது உலக அரங்கில் நமக்கு பெருமை. இந்தியாவில் தயாரான தடுப்பூசியை வாங்குவதற்காக 50 நாடுகள் 
காத்திருக்கின்றன. இது இந்தியாவின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story