பெங்களூருவில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்து விற்ற சென்னையை சேர்ந்தவர் உள்பட 8 பேர் கைது; 13 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்


பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்களை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டார்.
x
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்களை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டார்.
தினத்தந்தி 2 March 2021 2:52 AM IST (Updated: 2 March 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்து விற்ற சென்னையை சேர்ந்தவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 13 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு்ள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில், சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்து விற்ற சென்னையை சேர்ந்தவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 13 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு்ள்ளது.

இதுதொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

துப்பாக்கி விற்கும் கும்பல்

பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருக்கும் வாலிபர் ஒருவர் துப்பாக்கி விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

 கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தங்கும் விடுதியில் இன்ஸ்பெக்டர் குமாரசாமி தலைமையில் நடந்த சோதனையின் போது கதீர்கான்(வயது 32) என்பவர் கைதாகி இருந்தார். அவரிடம் இருந்து 2 துப்பாக்கி, 8 தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த கும்பல்களுக்கு தொடர்பு இருப்பதும், தனக்கு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயாஜூல்லாகான் என்பவரின் மூலமாக துப்பாக்கி கிடைத்ததாகவும் கதீர்கான் கூறி இருந்தார்.

 அவர் கூறிய தகவலின் பேரில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பட்டீல் தலைமையில், இன்ஸ்பெக்டர் குமாரசாமி தலைமையில் 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

சென்னை சேர்ந்தவர் கைது

முதலில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு சம்பிகேஹள்ளியில் நடந்த கொலையில் கைதான பயாஜூல்லா கானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது துப்பாக்கி விற்கும் கும்பலை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் இருப்பது உறுதியானது.

 இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய பிரதேச மாநிலத்தில் முகாமிட்டு துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த 8 பேரை கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பக்ரூதீன்(37), சல்மான்கான்(28), நாசிர்சேக்(50), குஜராத்தை சேர்ந்த சகனவாஜ் அன்சாரி(29), உத்தரபிரதேசத்தை சேர்ந்த பராக்குமார்(39), தமிழ்நாடு சென்னையை சேர்ந்த வினய்(29) மற்றும் பெங்களூரு ஆர்.கே.ஹெக்டே நகரை சேர்ந்த பயாஜூல்லாகான்(31) ஆகிய 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாறு வேடத்தில் சென்றனர்

இந்த கும்பலை மத்திய பிரதேசத்தில் தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் சென்று சந்தித்திருந்தனர். அப்போது அந்த கும்பலினர் சட்டவிரோதாக துப்பாக்கி தயாாித்து விற்பனை செய்வது பற்றியும், தங்களிடம் இருக்கும் துப்பாக்கிகள் எவ்வளவு சக்தி கொண்டவை என்பது குறித்தும் தனிப்படை போலீசாரிடம் செயல் விளக்கம் அளித்திருந்தனர். 

அந்த கும்பல் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்த பின்பு, அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

13 துப்பாக்கிகள் பறிமுதல்

இதற்காக மத்திய பிரதேச மாநில போலீசார் உதவியுடன், ஒரு மாதமாக சிரமப்பட்டு 8 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்திருந்தார்கள். கைதானவர்கள் ஒரு துப்பாக்கியை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்களே துப்பாக்கிகளை தயாரித்து விற்பன செய்து வந்துள்ளனா். தொழில்அதிபர்கள், ரவுடிகளுக்கு இந்த துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து 13 துப்பாக்கிகள், 56 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்றுள்ளார்கள், அவர்களிடம் இருந்து யாரெல்லாம் துப்பாக்கி வாங்கி உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படையை சேர்ந்த 30 போலீசார் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், துப்பாக்கி விற்கும் கும்பலை பிடித்துள்ளனர். இந்த கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு ரூ.75 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.

கமல்பந்த் பார்வையிட்டார்

முன்னதாக கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் தங்க நகைகள் ஆகியவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டார்.
அப்போது அவருடன், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பட்டீல் இருந்தார்.

Next Story