இமாசலபிரதேச சட்டசபை கூட்டம்: காங். எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு, போலீசில் புகார் வெளியில் அமர்ந்து தர்ணா
இமாசலபிரதேசத்தில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. அங்கு ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.
சிம்லா,
இமாசலபிரதேசத்தில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. அங்கு ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. முகேஷ் அக்னிகோத்ரி தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.
வெள்ளிக்கிழமை சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய சபாநாயகர், அன்று கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது காங்கிரசார், சர்ச்சை செய்து சபாநாயகரை பிடித்து இழுத்து தள்ள முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து சபாநாயகர் விபின் பர்மார், மறுநாள் கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சி சட்டசபை தலைவர் முகேஷ் அக்னிகோத்ரி உள்பட 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் குண்டுக்கட்டாக சட்டசபையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் சபாநாயகர் போலீஸ் டிஜி.பி.யிடம் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீது புகார் அளித்தார். அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வெளியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக அவர்கள் தர்ணா செய்ததுடன், தங்கள் மீதான சஸ்பெண்டு மற்றும் எப்.ஐ.ஆர். நடவடிக்கைகளை திரும்பப்பெற வலியுறுத்தினர். தங்களை சட்டையைப்பிடித்து குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட ஆளும் கட்சியினர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டும் என்று அக்னிகோத்ரி நிருபர்களிடம் கூறினார்.
Related Tags :
Next Story