பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - மன்மோகன்சிங் குற்றச்சாட்டு


பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - மன்மோகன்சிங் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 March 2021 12:37 AM IST (Updated: 3 March 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம்,

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசின் துணை அமைப்பான ராஜீவ் காந்தி வளர்ச்சி கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த ‘பிரதீக்‌ஷா 2030’ என்ற கருத்தரங்கம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கடன் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் பலன் இருக்காது. சிறிய, நடுத்தர தொழில்கள்தான் பாதிக்கப்படும். 

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. அமைப்புசாரா தொழில்துறை சீர்குலைந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் 2016-ம் ஆண்டு நன்கு சிந்திக்காமல் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம்.

கேரளாவிலும், இதர மாநிலங்களிலும் நிதி நிலவரம் மோசமாக உள்ளது. அந்த மாநிலங்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்குகின்றன. இது, எதிர்கால பட்ஜெட்டுகளில் தாங்கமுடியாத சுமையை உண்டாக்கும். கூட்டாட்சி முறையும், மாநிலங்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவதும் அவசியம். ஆனால், இன்றைய மத்திய அரசு இவற்றை செய்யவில்லை.

பல்வேறு முட்டுக்கட்டைகளை கடந்து கேரளா முன்னேற வேண்டும். கேரளாவில், தகவல் தொழில்நுட்பத்துறை செழிப்பான நிலையில் இருந்தாலும், கொரோனா தாக்கத்தால் சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தால், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள வேலைவாய்ப்புகளை கேரளா பயன்படுத்திக்கொண்டுள்ளது.

அதனால், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது. அதன்காரணமாக, ரியல் எஸ்டேட் துறையும், சேவைத்துறையும் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன.

இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

Next Story